1. (கிறீஸ்துநாதர்) என் மகனே! உன் சிநேகத்தில் இன்னும் பலமும் விமரிசையும் குறைகிறது. (ஆத்துமம்) ஏன் ஆண்டவரே? (கிறீஸ்து நாதர்) ஏனெனில் சொற்ப இடைஞ்சலை முன்னிட்டு நீ துவக்கினவைகளை நிறுத்தி விடுகிறதுமன்றி மிதமிஞ்சின ஆவலோடு ஆறுதலைத் தேடுகிறாய். பலமுள்ள சிநேகிதன் தந்திரங்களில் திடனாய் நிற்பான், சத்துருவின் கபடுள்ள துர்ப்போதனைகளை நம்பு வதில்லை. செல்வ காலத்தில் நான் அவனுக்குப் பிரியப்படுகிறேன், துன்பநாளிலும் நான் அவனுக்குப் பிரியப்படாதிருப்பதில்லை.
2. விமரிசையுள்ள நண்பன் தன் சிநேகிதன் கொடுக்கும் வரத்தைவிட அவன் அவ்விதம் காட்டுகிற நேசத்தை அதிகமாய் மதிப்பான். தன் மட்டில் காண்பித்த அன்பைக் கவனிப்பானே தவிர கொடையின் மதிப்பைக் கவனிக்க மாட்டான்; எல்லா வரங்களையும் விட அதிகமாக தன் சிநேகிதனை நேசிப்பான். நம்மைப் பரிசுத்தமாய் நேசிப்பவன் எவனோ, அவன் நாம் அவனுக்கு அளிக்கும் வரத்தைப் பற்றியல்ல, ஆனால் நம்மைப் பற்றியே நம்மை நேசிப்பான். நமது பேரிலும் நமது அர்ச்சியசிஷ்டவர்கள் பேரிலும் நீ ஆசிக்கிறது போல அன்பான பற்றுதல் உனக்கு சிலவேளை இல்லாதபோது, சிநேகம் உன்னிடத்தில் கொஞ்சங்கூட இல்லையென்று தப்பறையாய் நினைத்துக்கொள்ளாதே. சில சமயம் உன் உள்ளத்தில் நீ அனுபவிக்கும் உருக்கமும், இன்பமுமான பற்றுதல் வரப்பிரசாதத்தின் பலனும் பரலோக இராச்சியத்தின் முன்சுவையுமாயிருக்கின்றது. அது வருதலும் போதலுமாயிருப்பதால், அது எப்போதும் கிடைக்கு மென்று நம்பிக்கை வைக்கலாகாது. ஆனால் இருதயத்தில் உண்டாகும் தீய ஆசாபாசங்களோடு போராடுவதும், பசாசு வருத்து விக்கும் கெட்ட கவலைகளை நிந்தித்துத் தள்ளிவிடுவதுமே புண்ணியத்தினுடையவும், மிகுந்த பேறுபலனுடையவும் அடையாளமாயிருக்கின்றது.
3. ஆகையால் எத்தன்மையுள்ள விபரீத உருவங்கள் உன் மனதில் தென்பட்டாலும் அதைப்பற்றிக் கலக்கத்துக்கு இடம் கொடுக்கத் தகாது. உன் பிரதிக்கினையையும் சர்வேசுரன் மட்டில் உனக்கு உண்டான நேர்மையான கருத்தையும் திடமாய்க் காப் பாற்று. சில விசை நீ திடீரென்று பரவசமாகி, சற்று நேரத்திற்குப் பின் நீ உன் இருதயத்தில் வழக்கமான வீண் எண்ணங்களுக்குத் திரும்பு வதால் அந்தப் பரவசம் பொய்யுள்ளதென நினைக்க வேண்டாம். ஏனெனில் உன் மனதுக்கு விரோதமாய் இவைகள் உன் புத்தியில் வருகின்றனவேயன்றி நீ வேண்டுமென்று அவைகளை அழைக்க வில்லை. நீ அவைகளை வெறுத்துத் தள்ளிவிடுகிற வரையில், உனக்கு அது பேறுபலனாகுமேயொழிய பொல்லாங்காகாது.
4. உனது பழைய சத்துருவானது நீ விரும்பும் நன்மையான காரியத்தைக் கெடுக்கிறதற்காகவும், அர்ச்சியசிஷ்டவர்களை வணங்குதல், நமது திருப்பாடுகளைத் தியானித்தல், உன் பாவங்களை மனஸ்தாபத்துடன் நினைத்தல், சொந்த இருதயத்தைக் காத்தல், புண்ணியத்தில் வளர உறுதியான பிரதிக்கினை செய்தல், இது முதலான பக்திச் செயல் யாதொன்றும் நீ செய்யாதபடி தடை செய்கிறதற்காகவும், மிகவும் முயற்சி செய்கிறதென்று நீ அறிந்திரு. நீ செபம் செய்யாதபடிக்கும் ஞான வாசகம் வாசியாதபடிக்கும், உனக் குச் சலிப்பையும் திகிலையும் வருவிக்க அது அநேகம் பொல்லாத கவலைகளை மூட்டுகின்றது. தாழ்ச்சியுடன் நீ நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வது அதற்கு மிக அருவருப்பு; கூடுமானால், நீ நன்மை வாங்குவதை நிறுத்தி விடும்படியும் செய்யும். அதை நம்பாதே, உன்னை மோசம் செய்ய அடிக்கடி அது வலை வீசினபோதிலும் அதற்குப் பயப்படாதே. அது உன்னிடத்தில் எழுப்புகிற தீய காரியங் களும் தீய கவலைகளும் அதனாலேயே உண்டாகிறதென்று எண்ணி அதை நோக்கி: “அசுத்த அரூபியே! அப்பாலே போ! கெட்ட பசாசே, நீயே வெட்கப்படு! என்னிடம் இவ்வித அவலட்சண கவலைகளை மூட்ட நீ மிக அசுத்தனாயிருக்கிறாய். மகா துஷ்ட மோசக்காரப் பேயே, என்னை விட்டகன்று போ! என்னிடத்தில் உனக்கு ஒரு பாகமும் காணமாட்டாய்; ஆனால் சேசுநாதர் வீரதீர முள்ள வீரரைப் போல் என்னோடிருப்பார், நீயோ வெட்கி நிற்பாய். உன்னுடைய தந்திரத்திற்கு இணங்குவதை விடச் சாகவும் சகல வேதனைகளுக்கு உட்படவும் துணிந்திருக்கிறேன். பேசாதே, வாயை மூடு! நீ எனக்கு எத்தனை நெருக்கிடை செய்தபோதிலும் உனக்குச் செவிகொடுக்க மாட்டேன். ஆண்டவர்தான் என் பிரகாசமும் இரட்சணியமுமாயிருக்கிறார். நான் யாருக்குப் பயப்படப் போகிறேன்? போரணியாய் வரும் படைகள் என்மேலே எதிர்த்து வந்தாலும், என் இருதயம் அஞ்சாது! ஆண்டவர் எனக்குத் துணைவரும் இரட்சகருமாயிருக்கிறார்” என்று சொல்லு.
5. நல்ல வீரனைப் போல யுத்தம் செய்; சில சமயம் பலவீனத் தினால் தவறி விழுந்தால், அதிக வரப்பிரசாத உதவியை நம்பி முன்னை விட அதிகத் திடம் கொள்ளக் கடவாய்; விசேஷமாய் வீண் சுய பிரியத்திற்கும் ஆங்காரத்திற்கும் உட்படாதிருக்க எச்சரிக்கையா யிரு; எச்சரிக்கையில்லாமையினால் அநேகர் மோசம்போய் தீராத மனக்குருட்டாட்டத்தில் சிலவிசை விழுகிறார்கள். மிதமிஞ்சின சுய நம்பிக்கை கொண்ட அந்த ஆங்காரிகளுக்கு வந்த கேடு, நீ எச்சரிக்கையாயிருந்து எப்போதும் தாழ்ச்சியில் நிலைத்திருக்க உனக்கு உதவியாயிருக்கக் கடவது.
யோசனை
“ஆண்டவரே! ஆண்டவரே! என்று சொல்லுகிற எல்லாருமே மோட்சராச்சியத்தில் பிரவேசிப்பதில்லை; ஆனால் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தை எவன் நிறைவேற்றுகிறானோ, அவனே பரலோக இராச்சியத்தில் பிரவேசிப்பான்.” மெய்யான நேசம் கிரியையினால் விளங்குகிறது, எப்போதும் கீழ்ப்படியத் தயாராயிருக்கின்றது. ஒருபோதும் தளர்ந்துபோவதில்லை, அதைரியப்படுவ தில்லை, கஸ்தியிலும், சந்தோஷத்திலும், ஆறுதலிலும், துன்பத்திலும், சிருஷ்டியினால் கண்டுபிடிக்கக் கூடாத தமது தெய்வீகச் சித்தத் தின்படி தண்டித்துக் குணப்படுத்துகிற கடவுளுக்கு எப்போதும் துதி வணக்கம் செலுத்துகிறான். சோதனை காலத்தில் போராடுகிறான், மன அமைதியோடு எதிர்க்கிறான். தன் சொந்த பலத்தை நம்புவதில்லை, வெற்றி பெற சர்வேசுரனுடைய ஒத்தாசையை எதிர்பார்க்கிறான். சில சமயம் விழுந்தால் கலங்காமல் தாழ்ச்சியோடு உடனே எழுந்திருக் கிறான். அவதைரியம் கொள்வதில்லை, அமைந்த மனதோடு மனஸ் தாபப்படுகிறான், ஆங்காரத்தினால் ஆத்திரப்படுவதில்லை. தன் பாவங் களைப் பற்றி ஆச்சரியப்படுவதில்லை, ஆனால் வருத்தமடைகிறான், தன் பலவீனத்தை அறிந்து பெருமூச்சு விடுகிறான், ஆனால் தேவ உதவியின்பேரில் நம்பிக்கையாயிருக்கிறான். பூலோகப் பற்றுதலை ஒழித்து விட்டான். உலக நன்மைகளை நாடுவதில்லை; வேறு அவன் ஆசிப்பதென்ன? சர்வேசுரன் ஆசிப்பதை மாத்திரம் ஆசிக்கிறான். அவனுக்கு வேறு மனதுமில்லை, ஆசையுமில்லை, நேசிக்கப்பட்டவர் அவனை விட்டு அகன்று போகும்போது அவன் முறுமுறுப்பதில்லை, முறைப்படுவதில்லை. தான் தகுதியற்றவனென்று எண்ணுகிறான், தன்னைத் தாழ்த்துகிறான், புண்ணிய மார்க்கத்தில் அதிக சுறுசுறுப் புள்ளவனாகிறான். ஆ! சேசுவே, உம்மை நேசித்து உமது மட்டில் தாகமா யிருக்கிற ஆத்துமங்களை நீர் நடத்திப் போகும் வழிகள் எவ்வளவோ ஆச்சரியத்துக்கு உரியவைகளாயிருக்கின்றன! சில சமயங்களில் உமது ஆனந்தத்தினால் அவர்களை நிரப்புகிறீர், வேறு சில சமயங்களில் அவர்களைக் கண்ணீரில் விட்டுவிடுகிறீர். ஒரு சமயத்தில் வலிய அவர்களுக்கு உதவிபுரிகிறீர். சில சமயங்களில் அவர்கள் உம்மை மன்றாடியும், அவர்களுக்கு நீர் உடனே உதவி புரிவதில்லை. இப்படி யாய் அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பின் சிறுகச் சிறுகத் தங்கள் பாசக் கட்டுக்களைத் தறித்துவிட்டு உம்மை மாத்திரமே தேடி, நீர் உம்மைத் தரிசனை காண்பிக்கும் சிம்மாசனத்தடியில் வந்து நின்று “அவர் தம்மைக் காண்பிக்கும்போது திருப்தியடைவேன்” என்று சொல்லி நித்திய ஆனந்தத்தில் அமிழ்ந்து போகிறார்கள்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠