இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

06. சற்பிரசாதம் பெறுவதற்குமுன் சர்வேசுரனை நோக்கி விண்ணப்பம்.

(சீஷன்): ஆண்டவரே! உமது மகத்துவத்தையும் என் நீசத்தனத் தையும் நான் நினைத்துப் பார்க்கையில் எனக்கு மிகவும் பயமுண்டாகின்றது, என் உள்ளம் கலங்குகின்றது. ஏனெனில் நான் உம்மை அண்டி வராவிட்டால், ஜீவியத்தை விட்டகன்று போகிறேன்; தகுதியற்ற விதமாய் உம்மை அண்டி வந்தாலோ, நான் குற்றவாளி யாகிறேன். ஆனதால், என் சர்வேசுரா! என் அவசரங்களில் எனக்கு உதவிபுரிந்து புத்தி படிப்பிப்பவரே! நான் செய்ய வேண்டியதென்ன?

நீரே நேரான வழியை எனக்குக் கற்பித்தருளும். தேவ நற்கருணை வாங்க உதவியான யாதொரு சுருக்கமான ஆயத்த முயற்சியை எனக்குப் படிப்பித்தருளும். ஏனெனில் உமது தேவத்திரவிய அநுமானத்தை உத்தமமான விதத்தில் வாங்குவதற்கும் இவ்வளவு மகத்துவமுள்ள திவ்விய பூசையைச் செய்வதற்கும், எவ்வளவு பக்தி வணக்கத்தோடு என் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதை அறிவது எனக்கு மிக அவசியம்.

யோசனை

செபத்தியானம் செய்வதற்கு முன் தன் ஆத்துமத்தை ஆயத்தப் படுத்துவது அவசியமானால் சற்பிரசாதம் உட்கொள்ளுமுன் ஆயத்தப்படுத்துவது எவ்வளவோ அவசியம்; அதைப்பற்றித்தான் அர்ச். சின்னப்பர்: “மனிதன் தன்னைத் தானே பரிசோதித்து இந்த அப்பத்தினின்று புசிக்கக் கடவான், இந்தப் பாத்திரத்தினின்று குடிக்கக் கடவான்; ஏனெனில் தகுதியற்ற விதமாய்ப் புசித்துப் பானம் செய்கிறவன், அது ஆண்டவருடைய சரீரமென்று யோசியாத படியால், தன் நித்திய ஆக்கினைத் தீர்ப்பையே புசித்துப் பானம் செய்கிறான்” என்று சொல்கிறார். ஆனால் ஐயோ! ஆண்டவரே! நான் எவ்வளவுக்கு என்னைப் பரிசோதித்துப் பார்க்கிறேனோ, உமது சரீரத்தினுடையவும் இரத்தத்தினுடையவும் ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தில் உம்மோடு என்னை ஒன்றிக்க அவ்வளவுக்கு தகுதி யற்றவனென்று கண்டுகொள்கிறேன். ஆயினும் நான் “உமது மாமிசத்தைப் புசித்து, உமது இரத்தத்தைப் பானம் செய்யாமல் போனால், நான் உயிரோடிருக்கப் போவதில்லை.” உமது பந்தியில் வந்து அமர எனக்கு அளவற்ற ஆசையுண்டு. ஆனால் நான் தகுதியற்றவனானதால் “கலியாண உடுப்புத் தரியாமல் நீ இவ்விடத்தில் ஏன் பிரவேசித்தாய்? இவனுடைய கால்களையும் கைகளையும் கட்டி வெளி இருட்டில் போடுங்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்” என்ற வார்த்தைகளைக் கேட்க அஞ்சுகிறேன். ஆனதால் நான் என்ன செய்வேன்? நான் ஆண்டவ ருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து தாழ்ச்சியோடும் நம்பிக்கை யோடும் சொல்வேன்: “ஆண்டவரே! பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்.” நான் திவ்விய பந்தியில் உட்கார என்னைத் தகுதி யுள்ளவனாக்கியருளும். நீர் எனக்கு உதவியாக வராவிட்டால் நான் ஒருபோதும் தகுதியுள்ளவனாகப் போவதில்லை, என்றென்றைக்கும் அந்தத் திருப்பந்திக்குப் பங்காளியாகப் போவதில்லை; ஆனால் ஆண்டவரே! நிர்ப்பாக்கியனான என்பேரில் உமது திருக்கண் களைத் திருப்பியருளும். ஆண்டவரே! உமது பேரில் என் நம்பிக்கை வைத்தேன். நித்தியத்திற்கும் நான் கலக்கம் கொள்ளப் போவதில்லை.