இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

06. நல்ல மனச்சாட்சியினால் உண்டாகும் மகிழ்ச்சி

1. நல்ல மனிதனுடைய மேன்மை அவனுடைய மனது சொல்லும் நல்ல சாட்சியே. நல்ல மனச்சாட்சியுள்ளவனாயிரு, எப்போதும் சந்தோஷம் கொண்டிருப்பாய். நல்ல மனச்சாட்சி அநேக துன்பங்களைச் சகிக்கவும் இடையூறுகளின் மத்தியில் முதலாய் வெகு சந்தோஷம் கொள்ளவும் கூடுமானது. கெட்ட மனசாட்சியோ, எப்போதும் பயந்து கொண்டும் கலக்கப்பட்டுமிருக்கும், உன் மனச்சாட்சி உன்னைக் கண்டியாதிருந்தால், இன்பமான இளைப்பாற்றி யைச் சுகிப்பாய். நற்செயல்களைச் செய்தாலே தவிர, மற்றப்படி சந்தோஷம் கொள்ளாதே. கெட்டவர்கள் மெய்யான சந்தோஷம் ஒருபோதும் அடைவதில்லை, மனச் சமாதானத்தையும் உணருவதில்லை; ஏனெனில், “அக்கிரமிகளுக்குச் சமாதானமில்லை” என்று ஆண்டவர் திருவுளம்பற்றுகிறார். “நாங்கள் சமாதானத்தில் இருக்கிறோம், எங்களுக்குத் தின்மை ஒன்றும் வராது. எங்களுக்குப் பொல்லாங்கு செய்யத் துணிகிறவன் யார்?” என்று இவர்கள் சொன் னாலும், அவர்களை நம்பாதே; ஏனென்றால், திடீரென்று தேவகோபம் எழும்பி அவர்களுடைய செயல்கள் நிர்மூலமாகும், அவர்களுடைய எண்ணங்கள் அழிந்துபோகும்.

2. துன்பத்தில் மகிமை கொள்வது தேவசிநேகமுள்ளவனுக்குக் கடினமாயிராது; ஏனெனில், இப்படி மகிமை கொள்வது “ஆண்டவ ருடைய சிலுவையில் மகிமை கொள்ளுவதாகும்.” மனிதனால் மனித னுக்கு உண்டாகும் மகிமை நீடித்ததல்ல. உலக மகிமையை எப்போதும் சஞ்சலம் தொடர்ந்து வரும். நல்லோருடைய மகிமை அவர்களுடைய மனச்சாட்சியில் இருக்கிறது, மனிதருடைய வாயில் அல்ல. நீதிமான்களுடைய அக்களிப்பு சர்வேசுரனிடத்தினின்று உண்டாகின்றது, சர்வேசுரனிடத்தில் இருக்கிறது; அவர்களுடைய சந்தோஷம் உண்மையினின்று உற்பத்தியாகின்றது. மெய்யான நித்திய மகிமையை ஆசிக்கிறவன் அநித்திய மகிமையை சட்டை பண்ணுவதில்லை. அநித்திய மகிமையைக் தேடுகிறவனும் சரி, அல்லது அதை முழு மனதோடு நிந்தியாதவனும் சரி, தான் பரலோக மகிமையைக் குறைவாய் நேசிப்பதாக எண்பிக்கிறான். புகழ்ச்சி யையும் இகழ்ச்சியையும் கவனியாதவன் பெருத்த ஆத்தும சமாதான மடைகிறான்.

3. எவனுடைய மனச்சாட்சி சுத்தமாய் இருக்கின்றதோ அவன் எளிதாய்ச் சந்தோஷமாயும் அமரிக்கையாயும் இருக்கிறான். புகழ்ச்சி யினால் நீ அதிக பரிசுத்தனாகப் போவதில்லை; இகழ்ச்சியினால் நீ அதிக மாய்த் தாழ்ந்து போவதும் இல்லை. உள்ளபடியே நீ தேவனுடைய பார்வையில் எப்படி இருக்கிறாயோ அப்படியே உண்மையாகவே யிருக்கிறாய். உன்னைப்பற்றி மனிதன் சொல்லும் வாக்கியத்தால் மேற்பட்டவனாக மாட்டாய். உன் உள்ளத்தில் நீயே எப்படிப் பட்டவனாயிருக்கிறாயென்று யோசித்தால், வெளியில் உன்னைப் பற்றி மனிதர் என்ன பேசுகிறார்களென்று கவனிக்க மாட்டாய். “மனிதன் முகத்தை மாத்திரம் காண்கிறான்; சர்வேசுரனோ இருதயத்தைப் பார்க்கிறார்.” மனிதன் கிரியைகளைக் கவனிக்கிறான்; சர்வேசுரனோ கருத்துக்களைக் கவனிக்கிறார். எப்போதும் ஒழுங்காய் நடந்து தன்னை அற்பமாய் எண்ணுவது மனத் தாழ்ச்சியுள்ளவனின் அடையாளமா யிருக்கின்றது. எந்தப் படைக்கப்பட்ட வஸ்துவாலும் ஆறுதலடைய மனமில்லாதிருப்பது மிகுந்த பரிசுத்ததனத்தினுடையவும் சர்வேசுரன் பேரிலுள்ள நம்பிக்கையினுடையவும் அடையாளமாயிருக்கின்றது.

4. தனக்காக வெளியில் ஒரு சாட்சி ஆதரவையும் தேடாதவன், தன்னை முழுமையுமே சர்வேசுரனுக்குக் கையளித்து விட்டதாக எண்பிக்கிறான். ஏனெனில் “தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவ னல்ல, ஆனால் சர்வேசுரன் எவனைப் புகழுகிறாரோ அவனே நன்கு மதிக்கப்பட்டவன்” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். உள்ளத்தில் சர்வேசுரனோடு வசிப்பதும், வெளியில் யாதோர் பற்றுதலில் அகப்படாமலிருப்பதும், உள்ளரங்கச் சீவியத்தை நாடின மனித னுடைய அந்தஸ்தாம்.

யோசனை

தன் உள்ளத்தில் அமைதி காணாதவனுக்குப் வெளியில் அமைதி யேது? தன் உள்ளத்தில் அனுபவியாத சமாதானத்தைப் வெளியில் சிருஷ்டிகளிடத்தில் தேடும் இருதயம் முழு மோசம் போகின்றது. வெளியில் சமாதானமேது? நீ ஏன் மோசம் போகிறாய்! பெருங் காற்றால் அலைந்தாடும் கடல் உலகத்தைப்போல் அவ்வளவு அலைக் கழிக்கப்படுவதில்லை; அப்படியிருக்க, நீ அதை நோக்கி “என் கவலை யைத் தீர்” என்கிறாய்! சர்வேசுரனிடத்தில்தான் சமாதானத்தைக் காண்பாய்; பரிசுத்த மனச்சாட்சியில்தான் சந்தோஷமடைவாய். சுக இன்பங்கள் சிறிதுநேரம் பராக்கை மூட்டுகின்றன. ஆசாபாசங்கள் ஆனந்தம் வருவிக்கின்றன. ஆனால் அந்நேரம் கடந்துபோனபிறகு என்ன மீதியாயிருக்கின்றது? இன்னும் இன்பங்களைச் சுகிக்கிற காலத் திலே முதலாய் எவ்வளவு சலிப்பு! எவ்வளவு கசப்பு! மாசற்றதனத் தினால் உண்டாகும் பாக்கியத்துக்கு நிகரான பாக்கியமுண்டோ? உலக கவலைகளினின்று அகன்று நம்பிக்கையினாலும் நேசத்தினாலும் சர்வேசுரனோடு ஒன்றித்திருக்கும் ஆத்துமத்திற்குச் சமமான ஆத்தும முண்டோ? ஆனதால் அப்பேர்ப்பட்ட அந்தஸ்து உன்னுடைய தாகட்டும். ஆண்டவர் எம்மாத்திரம் இனிமையாய் இருக்கிறார் என்று சுவைத்துப் பார். கொஞ்சம் மனது வை, நல்ல மனதை உனக்குக் கொடுக்கிறவர், அதை நிறைவேற்ற உனக்குத் தயைபுரிவார்.