இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

05. தன்னைத்தான் ஆராய்ந்து பார்த்தல்

1. நம்மையே நாம் மிதமிஞ்சி நம்பலாகாது; ஏனெனில் அநேக முறை வெளிச்சத்தின் விசேஷ அருளும் நேர்மையுள்ள புத்தியும் குறைவுபடுகின்றன. நமது புத்தியின் தெளிவு வெகு சொற்பம்; அதையும் நமது அசட்டைத்தனத்தால் வெகு சீக்கிரத்தில் இழந்து போகிறோம். உள்ளத்தில் இவ்வளவு குருடராயிருக்கிறோ மென நாம் அநேகமுறை கண்டுணருகிறதில்லை. அநேக முறை பிசகாய் நடந்து கொள்கிறோம்; பிறகு சாக்குபோக்குச் சொல்கிறதோ அதிலும் அதிக பிசகாய் இருக்கின்றது. சில சமயங்களில் துர்க்குணத் தால் தூண்டப்படுகிறோம். அது பக்திச் சுறுசுறுப்பென்று எண்ணு கிறோம். மற்றவர்கள் செய்யும் அற்பக் குற்றங்களைக் கண்டிக்கிறோம்; நாமோ பலத்த குற்றங்களைச் செய்து வருகிறாம். பிறரால் நமக்கு உண்டாகும் கஷ்டத்தை உடனே நாம் கண்டுகொண்டு அது எவ்வளவு வருத்தமானதென்று யோசிக்கிறோம்; ஆனால் மற்றவர்கள் நம்மால் எவ்வளவு வருத்தமடைகிறார்களென்று நாம் யோசிப்பதேயில்லை. எதார்த்தமாய் தன் குறைகளை நிறுத்துப் பார்க்கிறவன் பிறரைக் கண்டிப்புடன் நிதானிக்க மாட்டான்.

2. உள்ளரங்கச் சீவிய மனிதன் மற்றெதையும் விட தன் ஆத்துமத்தைப் பற்றியே அதிகமாய்க் கவலைப்படுகிறான்; தன்னைப் பற்றியே சுறுசுறுப்பாய்ச் கவனித்து வருகிறவன் பிறரைப் பற்றி எளிதாய் பேசாதிருப்பான். பிறரைப் பற்றி நீ மவுனமாயிருந்து, உன்னைப் பற்றியே விசேஷமான விதமாய்க் கவனித்தாலே தவிர, மற்றப்படி நீ ஒருபோதும் உள்ளரங்கச் சீவியமுள்ளவனும் பக்தியுள்ளவனுமா யிருக்க போகிறதில்லை. உன்னையும் சர்வேசுரனையும் மாத்திரம் கவனித்து வந்தால், நீ கேள்விப்படும் வெளிச் சம்பவங்களைப் பற்றி அவ்வளவு கலங்கமாட்டாய். நீ உன்னைப் பற்றியே யோசனை செய் யாதபோது உன் புத்தி எங்கே போகிறது? உன்னைத் தான் அசட்டை செய்து மற்றெல்லாவற்றையும் விசாரித்ததினால் நீ அடைந்த பிரயோசனமென்ன? மெய்யான சமாதானமும் தேவ ஒன்றிப்பும் உனக்கு இருக்க வேண்டுமானால், மற்றதெல்லாம் விட்டகற்றி, உன் பேரில் மாத்திரம் கண்ணுண்டாயிருக்க வேண்டியது.

3. இப்பிரபஞ்சக் காரியங்களின் பேரில் நீ கவலை எல்லாம் நீக்கினால் புண்ணியத்தில் வெகு வளர்ச்சியடைவாய்; யாதொரு அநித்திய நன்மையைக் கனமாக மதித்தாலோ, மிகவும் பின்னடை வாய். முற்றும் சர்வேசுரன் அல்லது அவரைச் சேர்ந்த காரியங்களே தவிர மற்றொன்றும் உனக்குப் பெரிதாகவும், உயர்ந்ததாகவும், பிரிய முள்ளதாகவும், ஏற்றதாகவும் இராதிருக்கக் கடவது. சிருஷ்டிக்கப் பட்ட வஸ்துவினால் உண்டாகும் ஆறுதல் எல்லாம் வீணென்று எண்ணக்கடவாய். சர்வேசுரனை சிநேகிக்கிற ஆத்துமம், சர்வேசுர னுக்குக் கீழ்ப்பட்டதெல்லாவற்றையும் நிந்திக்கின்றது. நித்தியரும் அளவிறந்தவரும் சர்வ வியாபகருமான சர்வேசுரன் ஒருவரே ஆத்துமத்திற்கு ஆறுதலும் இருதயத்திற்கு மெய்யான ஆனந்தமுமா யிருக்கிறார்.

யோசனை

ஒவ்வொரு மனிதனிடத்திலுள்ள நன்மை தின்மைகளை ஒன்றும் விடாமல் நீ அறிந்திருந்தபோதிலும் நீ உன்னைத் தானே அறிந்திரா விட்டால், அதனால் உனக்கு உண்டாகும் பிரயோசனம் என்ன? கடைசி நாளில் மற்றவர்களுடைய மனச்சாட்சியைப் பற்றி உன்னை ஒருவரும் கணக்குக் கேட்கப்போவதில்லை. ஆங்காரத்தினாலும் கெட்ட புத்தியினாலும் உண்டாகும் இந்தக் கவலையை விட்டுவிடு. சர்வேசுரனுக்கு அதிகப் பிரியமானதும், உனக்கு அதிகப் பிரயோசன மானதுமான காரியத்தைப் பற்றிக் கவலை கொள். தன்னை அறிவதே பெரிதான சாஸ்திரம், உண்மையான கல்வி. எப்போதும் அதுவே நமது படிப்பாயிருக்க வேண்டியது. அப்போதுதான் நம்மையே நிந்திக்கவும், நமது இருதய துர்க்குணங்களைப் பற்றியும் நம்மை ஆட்கொண்டிருக்கும் மிதமிஞ்சின சுயநேசத்தைப் பற்றியும் நம்மை உபாதிக்கும் நமது இரகசிய நாட்டங்களைப் பற்றியும் புலம்பியழவும் கற்றுக்கொள்வோம். அப்போதுதான் அப்போஸ்தலரோடு: “இந்தச் சாவுக்குரிய சரீரத்தினின்று என்னை மீட்பவர் யார்?” என்று சொல்வோம். ஓ பாக்கியமான விடுதலை! பிரமாணிக்கராயிருந்தால், நாம் பிறகு காண்பதென்ன? சர்வேசுரனை மாத்திரம் காண்போம். அவரிடத்தில் சகல காரியங்களையும், ஆறுதலையும், நன்மைகளையும் காண்போம்; ஆ என் ஆத்துமமே! காரியம் இப்படியாகையால் உன்னை அழுத்தும் உலகத்தினுடையவும் சிருஷ்டிகளுடையவும் பாரச் சுமையினின்று நீங்கி, சர்வேசுரன் ஒருவரோடு மாத்திரம் ஒன்றித்திருக்க இப்போதே துவக்கு.