இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

05. தேவசிநேகத்தின் ஆச்சரியத்துக்குரிய சக்தி

1. (ஆத்துமம்) பரலோக பிதாவே! என் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய தந்தையே! நிர்ப்பாக்கியனான என்னை நீர் நினைக்கக் கிருபை புரிந்தீர் என்பதால் நான் உம்மைத் தோத்தரிக்கிறேன். இரக்கம் நிறைந்த பிதாவே! சர்வ ஆறுதலும் தந்தருளும் சர்வேசுரா! எவ்வித ஆறுதலுக்கும் தகுதியற்றவனான என்னை உமது ஆறுதலால் சில சமயங்களில் தேற்றியிருக்கிறீரானதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மையும், உமது ஏக சுதனையும், தேற்றுகிறவ ராகிய இஸ்பிரீத்துசாந்துவையும் எப்போதும் தோத்தரித்து, சதா காலத்துக்கும் வாழ்த்துகிறேன். ஆ! என் ஆண்டவராகிய சர்வேசுரா! என் ஆத்துமத்தின் பரிசுத்த அன்பரே! நீர் என் இருதயத்தில் எழுந்தருளி வரும்போது என் உட்புலன்களெல்லாம் அக்களிப்புக் கொள்ளும். “நீர் என் மகிமையும் என் இருதயத்தின் ஆனந்தமுமா யிருக்கிறீர்; என் துன்ப நாளில், நீர் என் நம்பிக்கையும் என் அடைக்கலமுமாக இருக்கிறீர்.” 

2. ஆனால் நான் இன்னும் தேவசிநேகத்தில் பலவீனனும் புண்ணியத்தில் குறையுள்ளவனுமாயிருப்பதால், நான் உம்மால் பலப்படுத்தப்படவும் ஆறுதலடையவும் வேண்டியது அவசியம். ஆனது பற்றி நீர் என்னை அடிக்கடி சந்தித்து, உமது பரிசுத்த முறைமைகளை எனக்குக் கற்பித்தருளும், கெட்ட ஆசாபாசங்களினின்று என்னை இரட்சித்தருளும், ஒழுங்கற்ற சகல பற்றுதல்களிலும் நின்று என்னைக் குணப்படுத்தும்; அப்போதுதானே உள்ளரங்கப் பிணிகளினின்று குணமாகி நன்றாய்ச் சுத்திகரிக்கப்பட்டு உம்மை நேசிப்பதற்குத் தகுதியானவனும், துன்பங்களைச் சகிக்கப் பலமுள்ளவனும், புண்ணியத்தில் நிலை கொள்ள உறுதியுள்ளவனுமாவேன்.

3. தேவசிநேகம் என்பது மகா அருமையான காரியம்தான்; அது எல்லாவற்றிலும் மகா பெரிய நன்மை; பாரமானதெல்லா வற்றையும் அது தனியாகவே (வேறு சகாயமின்றி) இலேசானதாக்கிச் சீவியத்தின் விபரீதங்களை ஒரே மன நிலையுடன் சகிக்கச் செய்யும். ஏனென்றால் அது களைப்பின்றிப் பாரமானதைச் சுமக்கும்; கசப்பான சகலத்தையும் இனிமையானதும் ருசிகரமுள்ளதுமாய் ஆக்கும். சேசுவின் மாட்சிமையுள்ள சிநேகமானது மகத்தான காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றது; அதிக உத்தமமானதை எப்போதும் ஆசிக்க ஏவுகின்றது. தேவசிநேகம் பரலோகம் ஏறவும், அதற்கு இவ்வுலக காரியங்களினால் ஒருபோதும் தடைப்படாதிருக்கவும் ஆசிக்கின்றது. தனது ஞானக் கண்பார்வை எதனாலும் மங்கிப் போகாமல், அனுகூலத்தால் தான் தடுக்கப்படாதபடிக்கும், தோல்விகளுக்கு முன் தைரியமிழந்து போகாதபடிக்கும், சிநேகமானது எவ்வித உலகப் பற்றுதலினின்றும் மீட்கப்பட்டு முழு சுயாதீனமடையத் தேடும். பரலோகத்திலாவது பூலோகத்திலாவது சிநேகத்தைப் பார்க்க அதிக மதுரமானதும், அதிகப் பலமானதும், அதிக உன்னதமானதும், அதிக விசால மானதும், அதிகப் பிரியமானதும், அதிக சம்பூரணமானதும், அதிக நேர்த்தியானதும் ஒன்றுமில்லை; ஏனெனில் சிநேகமானது சர்வேசுரனிடத்தில் உற்பத்தியாகி, சர்வ சிருஷ்டிகளுக்கு மேலாக அவரிடத்திலே மாத்திரமே தங்கியிருக்க முடியும்.

4. தேவசிநேகமுள்ளவன் ஓடுகிறான், பறக்கிறான், அகமகிழ் கிறான்; சுயாதீனமுள்ளவனாய், ஒன்றாலும் தடைப்பட மாட்டான். சர்வத்தையும் அடைய சர்வத்தையும் கொடுத்து விடுகிறான், எல்லா வற்றிலும் எல்லாமும் அவனுக்கு உண்டு; ஏனென்றால் சகல நன்மைக்கும் ஊறணியும் காரணமுமாயிருக்கிற உந்நத ஏகமானவ ரிடத்தில் சர்வ காரியங்களுக்கு மேலாய் இளைப்பாறுகிறான். வரங்களைக் கவனிக்கிறதில்லை, ஆனால் சகல வரங்களுக்கும் மேலாக அவைகளை அளிக்கிறவரையே நோக்குகிறான். சிநேகம் அநேக முறை அளவறியாது, ஆனால் அதன் உக்கிரம் அதனை எல்லா அளவுக்கும் மேலாக இழுத்துக்கொண்டு போகின்றது; சிநேகம் பாரத்தை உணர் வதில்லை. பிரயாசையைக் கவனிப்பதில்லை. கூடுமானதற்கு அதிக மாய்ச் செய்ய ஆசிக்கிறது. முடியாதென்பது அதற்கு ஒரு சாக்காகாது, ஏனெனில் எல்லாம் தன்னால் முடியுமென்றும் எல்லாம் செய்யக் கூடுமென்றும் எண்ணுகின்றது. ஆதலால் சகலமும் செய்ய அதற்குச் சக்தியுண்டு; சிநேகமில்லாதவன் தைரியமிழந்து சோர்ந்து கிடக்கு மிடத்தில், சிநேகமுள்ளவன் நூதன காரியங்களைச் செய்து முடித்து விடுவான்.

5. சிநேகம் விழித்துக் கொண்டேயிருக்கின்றது; நித்திரையும் அதன் விழிப்பைப் போக்காது, களைத்துப் போகின்றது, ஆனால் சோர்ந்து போவதில்லை; கட்டுண்ட போதிலும் சுயாதீனமாயிருக் கிறது; பயமுறுத்தினாலும் கலங்குவதில்லை. ஆனால் உக்கிரமான அக்கினிச் சுவாலை போலும், கொழுந்து விட்டெரியும் தீவட்டி போலும், மேலே தாவி கஷ்டமின்றி ஊடுருவிப் பாயும். சிநேகிக் கிறவனே சிநேகத்தின் இரைச்சலை என்னவென்று அறிவான். ‘என் சர்வேசுரா, என் அன்பே, நீர் எனக்கு முழுதும் சொந்தம், நான் உமக்கு முழுதும் சொந்தம்’ என்று சொல்லும் ஆத்துமத்தின் உருக்கமான பற்றுதல் சுவாமியினுடைய செவிக்குப் பேரொலியாயிருக்கிறது.

6. சிநேகிப்பதும், தேவசிநேகத்தில் அமிழ்ந்து உருகிப் போவதும் எவ்வளவு இன்பமானதென்று என் ஆத்தும உணர்வால் சுவைபார்க்க நான் கற்றுக்கொள்ளும்படி, என் இருதயத்தின் சிநேகச் சக்தியை அதிகப்படுத்தியருளும். அன்பில் சிக்கியவனாய், மிகுதியான உருக்கத்தில் நான் எனக்கு மேலெழும்பக் கடவேனாக! “சிநேகத்தின் சங்கீதத்தைப் பாடுவேனாக; என் நேசரே, உம்முடன் உந்நதங்களில் செல்லக்கடவேனாக, என் ஆத்துமம் உமது சிநேகத்தில் ஆனந்திப்பதிலும் உமது மாட்சிமையைத் துதிப்பதிலும் தன் சத்துவமெல்லாம் செலவழித்துவிடக்கடவது! நான் என்னை நேசிப்பதைவிட உம்மை அதிகமாய் நேசிப்பேனாக! உம்மைப்பற்றி மாத்திரமே என்னை நேசிப்பேனாக! உம்மிலிருந்து கதிர்வீசும் பிறர் சிநேகக் கட்டளை கற்பிப்பது போல, உம்மை மெய்யாகவே நேசிக்கிற சகலரையும் உம்மிலேயே நேசிப்பேனாக!” 

7. சிநேகமானது வேகமும் உண்மையும் ஊக்கமும், இன்ப மதுரமுமாயிருக்கின்றது; பலம், பொறுமை, பிரமாணிக்கம், விவேகம், நிலைமை, தைரியமுள்ளதாயிருக்கிறது; தன்னையே ஒரு போதும் தேடுவதில்லை; சுயநேசம் வருமிடத்தில் சிநேகம் நிற்காது. சிநேகமானது எச்சரிக்கை, தாழ்ச்சி, நேர்மையுள்ளதாயிருக்கின்றது; ஊக்கமற்றதாயிராது, வீண்காரியங்களில் கவனம் செலுத்தாது; அடக்கம், கற்பு, உறுதி, அமைதியுள்ளதாயிருக்கிறது, தன் ஐம்புலன் களைக் கவனமாய்க் கட்டிக் காக்கும். சிநேகம் மடாதிபருக்குப் பணிந்து கீழ்ப்படியும், தன்னையே இகழ்ந்து நிந்திக்கும்; சர்வேசுரன் மட்டில் பக்தியுள்ளதும் நன்றியுள்ளதுமாய், அவர் தனக்கு ஆறுதல் தந்தருளாதபோது கூட எப்போதும் அவர்மட்டில் விசுவாசம் நம்பிக்கையுள்ளதாயிருக்கும், ஏனென்றால் துன்பக் கலப்பில்லாமல் ஒருவன் சிநேகத்தில் சீவிப்பதில்லை.

8. சகலத்தையும் சகிக்கவும், நேசிக்கிறவருடைய சித்தப்படி நடக்கவும் தயாராயிராதவன் நேசன் என்று அழைக்கப்படத் தகுதி யானவனல்லன். நேசிக்கிறவன் தன் நேசரைப் பற்றிப் பிரயாசைç யயும் சகல கஷ்டங்களையும் மனப்பூர்வமாய் அனுபவிக்க வேண்டும்; எவ்வித இடைஞ்சலான சமயங்களிலும் அவரிடத்தினின்று அகலாமல் இருக்க வேண்டும்.

யோசனை

“சர்வேசுரன் சிநேகமாயிருக்கிறார். சிநேகத்தில் நிலைக்கிறவன் சர்வேசுரனிடம் நிலைக்கிறான், சர்வேசுரன் அவனிடம் நிலைக்கிறார்.” சிநேகத்துக்குச் சந்தோஷ காலமிருப்பதுபோலச் சோதனை காலமும் உண்டு. இந்தச் சீவியம் முழுவதும் ஓயாத சிநேக முயற்சிகளாலும், பலிகளாலும் நிறைந்திருக்க வேண்டியது. அப்படியிருந்தால்தான் நித்திய சீவியமும் மாறாத நேசமும் அதன் சம்பாவனையாயிருக்கும். அர்ச். சின்னப்பரால் சிநேகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டதெல்லாம் சிநேகத்தினால் செய்யப்படும் பலிகளை விசேஷித்துக் காண்பிக் கின்றன. நித்திய நேசமே நித்திய பலியினால் நேசத்தைப் பூரணமாய்க் காண்பித்தது; “சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தமது ஏக குமாரனையே கையளித்தார்.” சர்வேசுரன் மட்டில் நமக்குண்டான நேசத்தையும் நமது நிலைமைக்குத் தகுந்தபடி பலியினால் நாம் காண்பிக்க வேண்டியது. நமது மனதை, நமது இருதயத்தை, நமது புலன்களைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படுத்திப் பலியாக்க வேண்டியது. அப்போதுதான் சேசு நாதருக்கும் நமக்கும் ஒன்றிப்பு உண்டாகும். நமது சுபாவ குணம் நம்மிடம் குடிகொண்டிருக்கிற வரையில் சர்வேசுரனிடத்திலும் சேசுநாதரிடத்திலுமிருந்து நாம் பிரிந்திருக்கிறோம். பலியை நிறை வேற்றும்படி சேசுநாதர் நம்மைத் தூண்டி அவர் உயிர்விடுவதற்கு முன் “எல்லாம் நிறைவேறிற்று” என்று சொன்ன வாக்கியத்தை நாமும் சொல்ல வேண்டுமென விரும்புகிறார்.