இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

05. சற்பிரசாதத்தின் மகத்துவமும் குருத்துவ அந்தஸ்தின் பெருமையும்

1. (கிறீஸ்துநாதர்): நீ சம்மனசுக்களுடைய பரிசுத்ததனமும் ஸ்நாபக அருளப்பருடைய அர்ச்சியசிஷ்டதனமும் உடையவ னானாலும் இந்தத் தேவத்திரவிய அநுமானத்தைப் பெறவோ, கையால் தொடுவதற்கும் கூடவோ தகுதியுடையவனாக மாட்டாய். ஏனெனில் மனிதன் கிறீஸ்துநாதருடைய சரீரத்தைத் தேவ வசீகரம் செய்வதும் கையில் ஏந்துவதும், சம்மனசுக்களுடைய அப்பத்தைப் போசனமாக உட்கொள்வதும், அவனுடைய பேறுபலன்களைப் பார்த்து அவனுக்குக் கொடுக்கப்படுவதல்ல.

சம்மனசுக்களுக்குக் கொடுக்கப்படாத அதிகாரம் இதோ குருக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; இவர்களின் மகத்துவம் எவ்வளவு உந்நதமானது! ஏனெனில் திருச்சபை முறையின்படி அபிஷேகம் பெற்ற குருக்கள் மாத்திரமே திவ்விய பூசை செய்து கிறீஸ்துநாதருடைய சற்பிரசாதத்தைத் தேவ வசீகரம் செய்ய அதிகார முடையவர்களாயிருக்கிறார்கள்.

குருவானவர் சர்வேசுரனுடைய மெய்யான ஸ்தானாதிபதியாய், அவருடைய கட்டளையின்படியும் ஏற்பாட்டின்படியும் தேவ வாக்கியங் களையே உச்சரிக்கிறார்; ஆனால் இந்தப் பரம இரகசியத்தின் பிரதான காரணகர்த்தாவாய் மறைவாயிருந்து இதை நிறைவேற்றுகிறவர் சர்வேசுரனே; இவருடைய சித்தத்திற்குச் சகலமும் கீழ்ப்படிகின்றது.

2. ஆகையால் இந்த மகா உன்னத அனுமானத்தில் உங்கள் சொந்தப் புலன்களையும் அல்லது யாதொரு வெளிப்படையான அடையாளத்தையும் கொண்டு விசுவசியாமல் தேவனுடைய சர்வ வல்லபத்தைப் பற்றியே விசுவசிக்க வேண்டியது. ஆனபடியால் பயபக்தி மரியாதையோடு இந்தச் செயலை நீங்கள் செய்ய வேண்டியது.

மேற்றிராணியார் உங்கள்பேரில் கரங்களை நீட்டி உங்களுக்கு எப்பேர்ப்பட்ட அலுவலைக் கொடுத்தாரென்று கவனித்து யோசனை செய்யுங்கள். இதோ! நீங்கள் பூசை செய்யும்படி குருவானவராய் அபிஷேகம் செய்யப்பட்டீர்கள்; இப்போது தக்க ஆசாரத்தோடும், பக்தி யோடும், தக்க காலத்திலும் சர்வேசுரனுக்குப் பூசைப்பலி ஒப்புக்கொடுக்கவும், மாசற்றவராய் நடந்துகொள்ளவும் கவனமாயிருங்கள்.

உங்கள் சுமை குறைவானதல்ல; ஒழுங்குகளின் பந்தனத்தால் அதிக நெருக்கமாய்க் கட்டப்பட்டீர்கள்; புண்ணிய சாங்கோபாங் கத்தில் அதிகமாய் வளரக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். குருவானவர் சகல புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மற்றவர்களுக்கு நல்லொழுக்க மாதிரிகை காண்பிக்க வேண்டியது. அவருடைய நடத்தை மனிதருடைய சாதாரண மாதிரிகையாக இருக்கத்தகாது; ஆனால் பரலோகத்தில் சம்மனசுக்களுடையவும், பூமியில் உத்தம புண்ணியவான்களுடையவும் நடத்தை மாதிரிகை யாக இருக்க வேண்டியது.

3. திரு உடைகளை அணிந்திருக்கிற குருவானவர், தனக்காகவும் சகல சனங்களுக்காகவும் சர்வேசுரனைப் பணிவோடும் தாழ்ச்சியோடும் மன்றாடுவதற்காகக் கிறீஸ்துநாதருடைய ஸ்தானாதி பதியாயிருக்கிறார். கிறீஸ்துநாதருடைய பாடுகளை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொள்ளும்படி ஆண்டவருடைய சிலுவை அடை யாளத்தை முன் னும் பின்னும் தரிக்கிறார். கிறீஸ்துநாதருடைய திரு மாதிரிகைகளைக் கவனமாய் நோக்கவும் அவைகளை உருக்கமாய்க் கண்டுபாவிக்கவும் பூசை உடுப்பின் முன்புறத்தில் சிலுவையைத் தரிக்கிறார். பிறரால் தனக்கு நேரிடும் துன்பதுரிதங்கள் அனைத்தும் சர்வேசுரனைப் பற்றிப் பொறுமையாய்ச் சகித்துக் கொள்ளும்படி பின்புறத்தில் சிலுவை வரையப்பட்டிருக்கிறது. தன் சொந்தப் பாவங் களைப் பற்றி அழுகிறதற்காக முன்புறத்தில் சிலுவை தரித்திருக் கிறார்; மற்றவர்கள் கட்டிக் கொண்ட குற்றங்களுக்காக மனதிரங்கிக் கண்ணீர் சொரியும்படி பின்புறத்தில் சிலுவையடையாளம் அணிந் திருக்கிறார். ஏனெனில் சர்வேசுரனுக்கும் பாவிக்கும் நடுவே தான் மத்தியஸ்தனாக ஏற்படுத்தப்பட்டிருப்பதை மறந்து விடா திருக்கவும், தேவ ஒத்தாசையையும் பாவ மன்னிப்பையும் அடையும் வரையும் செபத்திலும் திருப்பலியிலும் அவர் சோர்ந்து போகாதிருக்கவும் வேண்டும்.

குருவானவர் திருப்பலிப் பூசை செய்யும்போது, சர்வேசுர னுக்குத் தோத்திரம் செய்கிறார், சம்மனசுக்களுக்கு ஆனந்தம் வருவிக்கிறார், திருச்சபைக்கு நன்மாதிரிகை காண்பிக்கிறார், ஜீவியருக்கு உதவி செய்கிறார், மரித்தோருக்கு இளைப்பாற்றி வருவிக்கிறார், தன்னையும் சகல நன்மைகளுக்குப் பங்காளியாக்கிக் கொள்ளுகிறார்.

யோசனை

நமது சத்திய வேத குருத்துவத்தின் மகத்துவத்தை நன்றாய்க் கண்டுபிடிப்பதற்கு அதற்குரிய இலட்சணங்களையும் அதற்கு விசேஷ விதமாய் இடப்பட்ட தெய்வீக முத்திரையையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது. முந்தமுந்த குருத்துவம் ஏகமா யிருக்கின்றது; “ஒரே சர்வேசுரன் மாத்திரமே இருப்பதுபோல, சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே; நமது விசுவாசத்தின் அப்போஸ்தலரும் சிரேஷ்ட குருவுமாகிறவர் சேசு கிறீஸ்துநாதர்தான். அவர் நமக்காகப் பரிந்து பேசுவதற்காக என்றென்றும் சீவித்திருக்கிறார். ஆதலால் தெய்வீகச் செயல்களை நடத்துகிற ஒவ்வொரு குருவும் சேசுகிறீஸ்துநாதரின் ஸ்தானாதிபதி. இன்னும் சொல்ல வேண்டுமானால் அவர் சேசுகிறீஸ்துநாதராகவே இருக்கிறார். கிறீஸ்துநாதரே தமது ஸ்தானாதிபதி சொல்லும் வார்த்தைகளையும், செய்யும் பலிச்செயல்களையும் நிறைவேற்று கிறார். அவரே கட்டுகிறார், அவிழ்க்கிறார்; அவர் ஒருவரே வரப் பிரசாதம் அளிக்கிறார்; அவரே பரிகாரப் பலியைத் தமது பிதா வுக்குப் பலியிட்டு ஒப்புக்கொடுக்கிறார். இப்பலியும் ஒன்றே. ஏனெனில் “சேசு கிறீஸ்துநாதர் தமது சொந்த இரத்தத்தின் சக்தியால் ஒரு முறை மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்தபிறகு நித்திய இரட்சணியத்தை முடித்தார்.” ஆனதால் ஒரே பலி, ஒரே குருவானவர், ஒரே குருத்துவம்; சேசு தமது திருச்சபையின் சகல குருக்களுள் காணப் படாத தலைமைக் குருவாகி, உலக முடிவுவரை பூமியில் தமது வேலையைத் தொடர்ந்து நடத்துவதற்குச் சகல திக்குத் திசைகளிலும் காணப்படுகிற விதமாய்ப் பெருக்கப்படுகிறார். 

குருத்துவம் பொதுவாகவும் இருக்கிறது. ஏனெனில், சகல சனங்களும் சேசுநாதருக்குச் சுதந்தரமாகக் கையளிக்கப்பட்டார்கள்; சூரியன் உதயமாகி அஸ்தமிக்கிற வரையிலும் சர்வ இடங்களிலும் ஆண்டவருக்குத் திவ்வியபலி பூசை நிறைவேற்றப்பட்டுக் காணிக்கை ஒப்புக் கொடுக்கப்பட வேண்டியது.

குருத்துவம் நித்தியமானது; ஏனெனில் அநாதி காலத்திலும் “நீர் எனது குமாரன், இன்றைய தினம் நாம் உம்மைச் ஜனிப்பித்தோம், மெல்கியஸதேக் முறையின் பிரகாரம் நீர் நித்தியமாய்க் குருவாயிருக் கிறீர்” என்று கிறீஸ்துநாதருக்குச் சர்வேசுரன் சொல்லுகிறார்.

அது பரிசுத்தமானது. ஏனெனில் “அர்ச்சியசிஷ்டவரும், மாசில் லாதவரும், பரிசுத்தரும், பாவிகளினின்று பிரிக்கப்பட்டவரும், பரலோகத்திற்கு மேலாக உயர்த்தப்பட்டவருமான பிரதான குரு நமக்கிருப்பதே தகுதி.” நித்திய குருத்துவம் பெற்றவரால் ஜெயிக்கப் பட்ட பசாசுக்களும் “நீர் சர்வேசுரனுடைய பரிசுத்தராயிருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று அவரைப் பற்றி சாட்சி சொல் கின்றன.

ஓ! குருவானவருடைய மகத்துவம் எவ்வளவோ உயர்ந்தது, எவ்வளவோ மேலானது! ஆனால் எவ்வளவோ அதற்கு அஞ்ச வேண்டியிருக்கிறது! குருத்துவம் ஏகமாயிருக்க, குருவானவருக்குக் கிறீஸ்துநாதரின் அதிகாரத்தில் பங்குண்டு; கிறீஸ்துநாதரிடமாயும், கிறீஸ்துநாதரோடும் குருவானவர் சிலுவைப்பலி ஒப்புக்கொடுக் கிறார், ஏனெனில் அதுவே பீடத்தில் இரத்தம் சிந்தாத விதமாய்த் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஜீவியத்தின் அப்பமும் பானமு மாகிய கிறீஸ்துநாதருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் விசுவாசி களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்; உலக இரட்சணியத்திற்காகச் சர்வேசுரனுடைய சுதனின் வேலையை ஏற்றுக்கொள்கிறார். குருவானவரின் கடமைகளோ அவருடைய பட்டத்தின் மகத்துவத் திற்குத் தக்கவைகளாயிருக்கின்றன; “பரிசுத்தராயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவரும் தேவனுமாயிருக்கிற நாம் பரிசுத்தராயிருக் கிறோம்” என்ற வாக்கியம் குருவானவருக்குத்தான் விசேஷமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆ! சேசுவே! பலவீனனும் நிர்ப்பாக்கியப் பாவியுமான நான் எவ்விதம் நீர் என்னிடம் கேட்கும் அர்ச்சியசிஷ்ட தனத்தை அடையப் போகிறேன்? நான் நினைக்கும்போது எனக்கு நடுக்கமெடுக்கிறது. நீர் உமது தயாளத்தால் என்னைத் திடப்படுத்தி என்னை நோக்கி “இது மனிதரால் கூடாத காரியம், ஆனால் சர்வேசுரனால் முடியாததொன்றுமில்லை” என்று எனக்குச் சொல்லாமல் போனால் நான் அவநம்பிக்கைக்கு உள்ளாவேன் என்பதற்குச் சந்தேகமில்லை.