இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

04. பக்தியோடு சற்பிரசாதம் உட்கொள்பவர்களுக்கு உண்டாகும் நன்மைகள்.

1. (சீஷன்) என் ஆண்டவராகிய சர்வேசுரா! உமது ஊழியனாகிய நான் உமது உந்நத சற்பிரசாதத்தைத் தகுதியோடும் பக்தியோடும் அண்டிவரப் பாத்திரவானாகும்படி “உமது மதுரமுள்ள ஆசீர்வாதங்களால் நீர் என்னை எதிர்கொண்டு சந்தித்தருளும்.” 

என் இருதயத்தில் தேவ சிநேகத்தை மூட்டிவிடும்; நான் ஆழ்ந்து கிடக்கும் அசமந்தத்தினின்று என்னை எழுப்பியருளும்; மதுரத்தின் ஊற்றைப்போன்ற இந்தத் தேவத் திரவிய அனுமானத்தில் அடங்கியிருக்கும் உமது அன்பின் மதுரத்தை என் ஆத்துமம் சுவைக்கும்படி “உமது வரப்பிரசாதத்தைத் தந்து என்னைச் சந்தித்தருளும்.” 

இவ்வளவு பெரிய இரகசியத்தை நான் கண்டுணர என் ஞானக் கண்களுக்கு ஒளி தந்தருளும்; நான் அதைத் தளராத விதமாய் விசுவசிப்பதற்கு என் விசுவாசத்தைப் பலப்படுத்தியருளும். ஏனெனில் அது உமது தெய்வீகத்தின் செய்கை, மனிதனுடையதல்ல; அது உமது திவ்விய ஏற்பாடு, மனிதன் கண்டு ஏற்படுத்தினதல்ல. உள்ளபடி சம்மனசுக்களுடைய கூர்மையுள்ள புத்திக்கு முதலாய் எட்டாத இந்தப் பரம இரகசியத்தைத் தன் சுபாவ அறிவால் எண்ணவும் கண்டுபிடிக்கவும் தகுந்தவன் எவனுமில்லை. ஆனதால் அயோக்கியப் பாவியும் வெறுந் தூசியும் சாம்பலுமாகிய நான் இவ்வளவு மேலான தேவ இரகசியத்தில் ஏதாகிலும் எப்படி ஆராய்ந்து கண்டுபிடிக்கக்கூடும்? 

2. ஆண்டவரே, இந்த தேவத்திரவிய அனுமானத்தில் தேவனும் மனிதனுமான நீர் இருக்கிறீரென்று உண்மையாகவே விசுவசித்து, கபடற்ற மனதுடையவனாய். நீர் எனக்குக் கட்டளையிட்டபடி உறுதியும் தாழ்ச்சியுமான விசுவாசத்தோடும் முழு நம்பிக்கை யோடும் உம்மை வணக்கமாய் அண்டி வருகிறேன்.

நான் உம்மை உட்கொள்ள வேண்டுமென்றும், தேவ சிநேகத் தால் நான் என்னை உம்மோடு ஐக்கியப்படுத்த வேண்டுமென்றும் சித்தமாயிருக்கிறீரல்லவா? ஆனது பற்றி நான் நேச அக்கினியால் எரிக்கப்பெற்று முழுவதும் உருகி உம்மிலே ஒழுகவும், உமக்கப்பால் இனி ஆறுதல் தேடாமலிருக்கவும் உம்மைக் கெஞ்சுகிறேன், உமது தயவை மன்றாடுகிறேன். 

ஏனெனில் மிகவும் உன்னத மேன்மையுள்ள இந்தத் தேவத் திரவிய அநுமானம் ஆத்தும சரீரத்திற்கு ஆரோக்கியமுமாய், சகல ஞான வியாதிகளுக்கும் மருந்துமாயிருக்கின்றது. அது துர்க்குணங் களை நிவர்த்தியாக்குகின்றது, ஆசாபாசங்களை அடக்கிப் போடு கிறது, வரப்பிரசாதத்தை அதிகப்படுத்துகிறது, புண்ணியத்தை அதிகரிப்பிக்கிறது, விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது, நம்பிக்கை யைப் பலப்படுத்துகிறது, தேவசிநேகத்தை அது பற்றியெரிந்து சுவாலை விடச் செய்கிறது.

3. ஓ! என் சர்வேசுரா! என் ஆத்துமத்தைப் பாதுகாக்கிறவரே! மனித பலவீனத்தைப் பரிகரிக்கிறவரே! சகல ஆறுதல்களையும் தந்தருளுகிறவரே! பக்தியோடு தேவ நற்கருணை உட்கொள்ளுகிற உமது நேசர்களுக்கு எத்தனையோ நன்மைகளை அளித்தீர், இன்னும் தினமும் அளித்துவருகிறீர்!

எப்படியென்றால் அவர்கள் அனுபவிக்கிற பற்பல துன்பங்களில் அவர்களுக்கு மிகுந்த ஆறுதல்களைப் பொழிகிறீர்; அவர்கள் அமிழ்ந்திருக்கிற மனச் சோர்வினின்று அவர்களை மீட்டு இரட்சித்து, அவர்கள் உமது பராமரிப்பின் மேல் நம்பிக்கை கொள்ளச் செய்கிறீர்; புதிதான வரப்பிரசாதத்தால் அவர்களை உள்ளத்தில் தேற்றித் தெளிவிக்கிறீர்; உம்மை உட்கொள்ளுமுன்னே மனக்கலக்கமும் வெதுவெதுப்பும் உள்ளவர்களாய் இருந்தார்கள், உமது திவ்விய மாம்சத்தையும் இரத்தத்தையும் உட்கொண்ட பின்போ மேலான அமரிக்கையையும் சுறுசுறுப்பான பக்தியையும் அடைகிறார்கள்.

உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்களிடம் எவ்வளவு பலவீனமிருக்கிறதென்றும், உம்மிடத்தினின்று என்னென்ன நன்மை வரப்பிரசாதமடைகிறார்களென்றும் சரியாய் அறிந்து சுய பரீட்சை யினாலே கண்டுபிடிக்கும்படி அவர்களை இவ்வித பராமரிப்பால் நடத்திவருகிறீர்! ஏனென்றால் அவர்கள் தங்கள் இயல்பிலே குளிர்ச்சி யுள்ளவர்களாய், கல்நெஞ்சராய், பக்திச் சுவையற்றவர்களாயிருக் கையில், உம்மாலே உருக்கமும் சுறுசுறுப்பும் பக்தியும் உள்ளவர் களாகிறார்கள்.

மதுரத்தின் ஊறணியைத் தாழ்ச்சியோடு அண்டி வருகிறவன், அம்மதுரத்தின் ஒரு துளியையாவது சுவை பாராதிருப்பானோ? அல்லது அக்கினிச் சுவாலையின் அருகில் நிற்கிறவன் கொஞ்சமாவது உஷ்ணம் அடையாதிருப்பானோ? என் சர்வேசுரா, நீர்தான் எப்போதும் நிறைந்து வழிந்துபோகிற ஊற்று, இடைவிடாமல் எரிந்து அவிந்து போகாத அக்கினி நீர்தான். 

4. ஆனதால் இந்த ஊற்றில் குறைவில்லாமல் நான் மொண்டு திருப்தியாய்ப் பானஞ்செய்ய என்னால் முடியாதிருந்தாலும், நான் முற்றும் வறண்டு போகாதபடி என் தாகத்தைத் தணிக்கக் கொஞ்சம் துளியாகிலும் அடைவதற்கு இந்தப் பரலோக நீரின் வாய்க்காலின் ஓரத்தில் என் வாயை வைத்துக் கொள்வேன்.

ஞானாதிக்கர், பக்திச்சுவாலகரைப் போல் நான் இன்னும் முற்றும் பரலோகத்தை நாடினவனுமாய், தேவசிநேக அக்கினி நிறைந்தவனுமாய் இராதபோதிலும், பக்திச் சுறுசுறுப்பாயிருக்கவும் என் இருதயத்தை ஆயத்தப்படுத்தவும் பிரயாசைப்பட்டு, ஜீவியம் கொடுக்கிற இந்தத் தேவத்திரவிய அநுமானத்தைத் தாழ்ச்சியோடு உட்கொள்வேன். அப்போது அந்தத் தேவ அக்கினிச் சுவாலையில் நான் கொஞ்சமாவது அடைவேனல்லவா!

நல்ல சேசுவே! மிகவும் பரிசுத்த இரட்சகரே! “வருந்திச் சுமை சுமக்கிறவர்கள் அனைவரும் நம்மிடத்தில் வாருங்கள், நாம் உங்க ளுக்கு இளைப்பாற்றியைக் கட்டளையிடுவோம்” என்று சகலரையும் உம்மிடத்தில் அழைக்கச் சித்தமானவரே! எனக்குக் குறைவுபடுகிற எல்லாவற்றையும் தயவோடும் இரக்கத்தோடும் நீரே எனக்குத் தந்தருளும்.

5. நானோ நெற்றி வியர்வை வேர்க்க உழைக்கிறேன், இருதய வியாகுலத்தால் உபாதிக்கப்படுகிறேன், பாவச் சுமையால் அமிழ்ந்து போகிறேன், சோதனைகளால் கலங்குகிறேன், அநேக தீய ஆசாபாசங் களில் அகப்பட்டுத் தவிக்கிறேன்; என் ஆண்டவராகிய சர்வேசுரா! என் இரட்சகரே! உம்மையன்றி எனக்கு உதவுகிறவர், என்னை இரட்சிக்கிறவர் எவருமில்லை; ஆனதால் நீர் என்னைத் தற்காத்து நித்திய சீவியத்துக்குக் கூட்டிக் கொண்டு போகும்படி, என்னையும் எனக்குச் சொந்தமான யாவையும் உமக்குக் கையளிக்கிறேன்.

உமது சரீரத்தையும் இரத்தத்தையும் எனக்குப் போசனமாகவும் பானமாகவும் ஆயத்தப்படுத்தின நீர் உமது திருநாமத்திற்குத் தோத்திரமும் மகிமையும் உண்டாகும்படி என்னைக் கையேற்றுக் கொள்ளும்.

என் ஆண்டவராகிய தேவனே! என் இரட்சகரே! உமது சற்பிரசாதத்தின் பரம இரகசியத்தை நான் அடிக்கடி பெறுவதால், என் பக்தியும் சிநேகமும் வளரும்படியாக அநுக்கிரகம் செய்தருளும்.

யோசனை

சேசுநாதர் சுவாமி பூலோகத்தை விட்டுப் போகும் போது தமது அப்போஸ்தலர்களுக்குத் தேற்றுகிறவரான இஸ்பிரீத்துசாந்துவை அளிப்பதாக வாக்களித்தார். புது உடன்படிக்கையின் தேவத்திரவிய அநுமானங்களில் இந்த இஸ்பிரீத்துசாந்துவானவர்தான் நமக்குக் கொடுக்கப்படுகிறார். பிதாவினுடையவும் சுதனுடையவும் நேசமா யிருக்கிறவராய், “அவர் நமது பலவீனத்திற்கு உதவி செய்கிறார்: தகுந்த விதமாய் நாம் கேட்க அறியாதிருப்பதால் இஸ்பிரீத்துசாந்து வானவரே நமக்கு வேண்டியவைகளைக் கேட்கிறார். இருதயங் களைப் பரிசோதிக்கிற கடவுள் இஸ்பிரீத்துசாந்துவானவர் ஆசிப் பதை அறிகிறார், ஏனெனில் இவர் சர்வேசுரனுடைய சித்தப்படியே புண்ணியவான்களுக்காக மன்றாடிக் கேட்கிறார்.” வல்லபமும் மதுரமுமான பிரசாதத்தினால் நம்முடைய மனது நன்மையை நாடும்படி செய்கிறார். அதைச் சுத்திகரிக்கிறார், அதைத் தேவனிட மாக உயர்த்துகிறார். வார்த்தையானவர் நமது ஒளியாயிருப்பது போல இஸ்பிரீத்துசாந்துவானவர் நமது பலமாயிருக்கிறார். நம்மிடத்தில் சேசுகிறீஸ்துநாதர் இருக்கும்போது வார்த்தை யானவரே நம்முடையவராய் இருப்பதுமல்லாமல், அவரிடமிருந்து புறப்படுகிற இஸ்பிரீத்துசாந்துவானவரும் நம்முடையவராகிறார். இருவரும் இரட்சகருடைய திரு மனுஷீகத்தை எந்நேரமும் சொல் லொண்ணா வரங்களால் அலங்கரித்துக் கொண்டிருக்க, திவ்விய நற்கருணையில் சேசுநாதருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் ஆத்துமத்தையும் தேவ சுபாவத்தையும் உட்கொண்டு அவரோடு ஒன்றித்திருக்கிற நாம் மேற்படி சகல வரங்களுக்கும் பங்காளி களாகிறோம்; அவரிடம் புத்தியின் பூரண செல்வமும், ஞானத் தினுடையவும் மேலான சாஸ்திரத்தினுடையவும் திரவியம் அனைத்தும் உண்டு. அந்தத் திரவியங்களைத் தேவநற்கருணை என்னும் தேவத்திரவிய அநுமானத்தின் வழியாக நமக்குத் திறந்து வைக்கிறார். நமது அவசரங்களுக்குத் தக்கபடி அந்தப் பரலோக செல்வங்களை நமக்களிக்கிறார். அதே நேரத்தில் அர்ச்சிக்கிறவரான இஸ்பிரீத்துசாந்துவானவர் தமது தேவ அக்கினிச் சுவாலைகளை நம்மிடத்தில் மூட்டிவிடுகிறார்; இவைகள் நம்மிடத்தில் மீதியான பாவ அசுத்தங்களைப் போக்குகின்றன, மோட்ச பாக்கியத்தின் முன்சுவையைச் சுகிக்கச் செய்கின்றன, இவ்வுலகத்தில் நமது சோதனைக் காலத்தின் முடிவு வரும்போது நாம் நித்திய பாக்கியத்தைப் பூரணமாய்ச் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக இப்போது நம்மை ஆயத்தப்படுத்துகின்றன. ஆனதால் தேவ வரப்பிரசாதங்களின் ஊற்றை நெருங்கிப் போங்கள், பீடத்தை நெருங்கிப் போங்கள், சேசுநாதரிடம் போங்கள். “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? உம்மிடத்தில் மாத்திரமல்லவா நித்திய சீவியத்தின் வார்த்தைகள் இருக்கின்றன.” நாங்கள் சோர்ந்து போகிறோம், நீர் எங்களைத் திடப் படுத்துகிறீர்; கஸ்திப்படுகிறோம், எங்களுக்கு ஆறுதல் சொல்கிறீர்; எங்களிடத்தில் உள்ளும் புறமும் பெருங்காற்று எழும்ப அலைமோது கிறோம். “நீர் காற்றுக்குக் கட்டளையிடுகிறீர். உடனே பெருத்த அமைதி உண்டாகின்றது.” ஓ சேசுவே, உமது நேசம் என்னை நெருக்கிப் போடுகின்றது. உம்மோடு ஒன்றித்திருக்கும்படி நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியினால் என் ஆத்துமம் களைத்துப் போகின்றது. உம்மோடு ஒன்றித்திருப்பதுதான் என் ஏக ஆசை; வேறு ஆசை எனக்கொன்றும் இல்லை. ஓ! என் ஆண்டவரே! உம்மை மாத்திரம் ஆசிக்கிறேன். “என் நேசர் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்; நான் அல்ல என்னிடத்தில் ஜீவிக்கிறது, சேசு கிறீஸ்துநாதரே என்னிடத்தில் ஜீவிக்கிறார்” என்று எப்போதுதான் நான் சொல்லக் கூடுமாயிருப்பேன்?