இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

04. சுத்த மனதும் நேர்மையான கருத்தும்

1. நேர்மை, சுத்தம் ஆகிய இவ்விரண்டும் உலக காரியங் களுக்கும் மேலாக மனிதனை இழுத்துக்கொள்ளும் சிறகுகளாம். நேர்மை கருத்திலும், சுத்தம் மனப்பற்றுதலிலுமிருக்க வேண்டியது. நேர்மை சர்வேசுரனை நோக்குகிறது. சுத்தமோ அவரையடைந்து சுகிக்கின்றது. உள்ளத்தில் ஒழுங்கீனமான பற்றுதலினின்று நீ விலகியிருப்பாயானால், எந்த நற்செயலையும் செய்வதற்குத் தடையிராது. சர்வேசுரனுடைய பிரியத்தையும் பிறனுடைய பிரயோசனத்தையும் மாத்திரமே நீ நாடித் தேடினால், உள்ளத்தில் சுயாதீனத்தைச் சுகிப்பாய். உன் மனது நேர்மையானதாயிருந்தால், சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துவெல்லாம் ஒழுங்குள்ள சீவியத்தைக் காட்டும் கண்ணாடி போலவும் பரிசுத்த போதகத்தைக் படிப்பிக்கும் புஸ்தகம் போலவும் இருக்கும். ஏனெனில், சர்வேசுரனுடைய தயாளத்தை ஞாபகப்படுத்தாத அவ்வளவு சொற்பமும் தாழ்ந்ததுமான சிருஷ்டி இல்லை.

2. நீ நல்லதும் பரிசுத்தமுள்ளதுமான மனதையுடையவனா யிருந்தால், சகலத்தையும் தெளிவாய் அறிந்து நன்றாய்க் கண்டுபிடிப்பாய். சுத்தமான இருதயம் பரலோகத்தையும் பாதாளத்தையும் ஊடுருவிப் பார்க்கின்றது. ஒவ்வொருவனும் தன் உள்ளத்தில் எவ்விதமிருக்கிறானோ அவ்விதமே வெளியிலும் தீர்மானிக்கிறான். சந்தோஷம் உலகில் உண்டானால், சுத்த இருதயமுள்ள மனிதனே அதை அனுபவிக்கிறான். எங்கேயாவது துன்பமும் இடையூறும் உண்டானால், தீய மனச்சாட்சியே அவைகளை அதிகமாய் அனுபவிக்கும். அக்கினியில் போடப்பட்ட இரும்பு துரு நீங்கி முழுதும் அக்கினி மயமாகிறதுபோல, சர்வேசுரனை ஆவலுடன் நாடி மனந்திரும்பும் மனிதன் அசட்டைத்தனமெல்லாம் விட்டகன்று புது மனிதனாக மாற்றப்படுகிறான்.

3. ஒருவன் புண்ணிய முயற்சியில் அசட்டைத்தனமுள்ளவ னாகத் துவக்கின உடனே சொற்பப் பிரயாசைக்கு முதலாய் அஞ்சுகி றான். வெளி ஆறுதலைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் குறையறத் தன்னை ஜெயிக்கவும், சர்வேசுரனுடைய வழியில் தைரியமாய் நடக்கவும் துவக்கும்போது, முன் தனக்கு வெகு கஷ்டமாயிருந்ததை இப்போழுது இலேசானதென்று எண்ணுகிறான்.

யோசனை

சேசுகிறீஸ்துநாதர் தமது சீஷர் கண்டுபாவித்து நடப்பதற்குச் சாஸ்திரிகளையும், புத்திக் கூர்மையில் சிறந்தவர்களையுமல்ல, ஆனால் சிறு பிள்ளைகளை மாதிரிகையாகக் காண்பித்தார். சிறுவன் ஒருவனை அழைத்து, அவர்களுடைய மத்தியில் நிறுத்தி, “மெய்யாகவே, நாம் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், நீங்கள் மனந்திரும்பி சிறு பிள்ளைகளைப்போல ஆகாமற் போனால், பரலோக இராச் சியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்” என்றார். சிறு வயதில் நாம் காண்கிறதென்ன? கபடற்றதனம், மாசற்றதனம். அது முன் பின் பாராமல் நம்புகின்றது, நேசிக்கின்றது, யாதாமொரு காரியத்தைச் செய்கின்றது; இதுதான் சர்வேசுரனுக்குப் பிரியம். அவர் நெடுஞ் செபங்களையும் வாய்ச்சாலகமான பிரசங்கங்களையும் ஆழ்ந்த தியானங்களையும் கேட்பதில்லை. ஆனால் கபடற்ற மனதையும், நேர்மையான நேசத்தையும் தேடுகிறார். அவர் ஆசிப்பதை நாம் ஆசிக்கவேண்டியது. நம்மைத்தானே முழுமையும் மறந்துவிட வேண்டியது. சர்வேசுரனுடைய சித்தத்திற்கு முழுமையும் கீழ்ப் படிந்து, அதை நிறைவேற்ற வேண்டியது. இப்பேர்ப்பட்ட கபடற்ற கீழ்ப்படிதலை விட மேலான காரியமேது? ஆனது பற்றியே அதன் சம்பாவனையும் மகத்தானது: “இருதய சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில், அவர்கள் சர்வேசுரனைக் காண்பார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.