இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

03. அடிக்கடி நன்மை வாங்குவதால் உண்டாகும் பிரயோசனம்.

1. (சீஷன்) ஆண்டவரே! உமது தானத்தைப் பெற்றுப் பயனடையவும் “உமது தயாளத்தின் மிகுதியால் ஏழைக்கு நீர் ஆயத்தம் செய்திருக்கிற” திவ்விய பந்தியின் இனிப்பைச் சுகித் தனுபவிக்கவும், இதோ! உம்மிடத்தில் வருகிறேன். நான் ஆசிக்கக் கூடிய எல்லாமும், ஆசிக்க வேண்டியதெல்லாமும் உம்மிடத்தில் கண்டடைகிறேன்; நீரே என் இரட்சணியமும், ஈடேற்றமும், என் நம்பிக்கையும் பலமும், என் பாக்கியமும் மகிமையுமாயிருக்கிறீர்.

ஆனதால், ஆண்டவராகிய சேசுவே! இன்று உமது ஊழிய னுடைய ஆத்துமத்தைச் சந்தோஷப்படுத்தியருளும், ஏனெனில் என் ஆத்துமத்தை உம்மை நோக்கி நான் எழுப்பினேன்.

இப்போது உம்மை பக்தியோடும் வணக்கத்தோடும் உட்கொள்ள ஆசைப்படுகிறேன். சக்கேயுவைப் போல் உம்மால் ஆசீர்வதிக்கப் படவும், அபிரகாமின் மக்களுக்குள்ளாக எண்ணப்படவும் நான் பாத்திரவானாகத் தக்கதாக உம்மை என் குடிசைக்குள் வரவழைக்க ஆசிக்கிறேன். என் ஆத்துமம் உமது சரீரத்தை ஆசிக்கின்றது, என் இருதயம் உம்முடன் ஒன்றித்திருக்க ஆசிக்கின்றது.

2. உம்மை எனக்குக் கையளித்துவிடும், இதுவே போதும்; ஏனெனில் உம்மையன்றி ஆறுதல் ஒன்றுமில்லை. உம்மையன்றி நான் இருக்க முடியாது, நீர் என்னைச் சந்திக்காவிட்டால் நான் ஜீவிக்க முடியாது. ஆகையால் அந்தப் பரலோக ஆகாரத்தை நான் புசியாமல் “வழியில் சோர்ந்து விழாதபடிக்கு” அடிக்கடி நான் உம்மை அண்டி வந்து, என் இரட்சணிய மருந்தை உட்கொள்ள வேண்டியது.

அதனாலல்லவா, மிகவும் இரக்கமுள்ள சேசுவே! நீர் மக்களுக்குப் பிரசங்கித்துப் பற்பல வியாதிகளைக் குணப்படுத்தினபோது: “அவர்கள் வழியில் சோர்ந்து விழாதபடிக்கு அவர்கள் வீட்டுக்கு அவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட நமக்கு மனமில்லை” என்று ஒருநாள் திருவுளம் பற்றினீர்.

ஆதலால் விசுவாசிகளுக்கு ஆறுதலாகத் தேவ நற்கருணையில் எப்பொழுதும் வியாபித்திருக்கச் சித்தமாயிருக்கிற நீர் எனக்கும் அவ்விதமே செய்தருளும். ஏனெனில் நீர் ஆத்துமத்தின் இன்பமான போசனமாயிருக்கிறீர், உம்மைத் தகுந்த வண்ணம் புசிக்கிறவன் நித்திய மகிமைக்குப் பங்காளியும், சுதந்தரவாளனுமாவான்.

நான் அடிக்கடி தோல்வியடைந்து பாவத்தைக் கட்டிக் கொள் கிறேன், வெகு சீக்கிரத்தில் வெதுவெதுப்பு உண்டாகிச் சோர்ந்து போகிறேன்; ஆனது பற்றி உமது திருச்சரீரத்தை உட்கொள்ளும்படி நான் அடிக்கடி செபத்தினாலும் பாவசங்கீர்த்தனத்தினாலும் என்னைப் புதுப்பித்துச் சுத்திகரித்து தேவசிநேக அக்கினியால் எரிவது எனக்கு மிக அவசியமாயிருக்கின்றது: இல்லாவிட்டால் நான் வெகு நாளைக்குத் தேவ நற்கருணை வாங்காமலிருந்து என் நல்ல பிரதிக்கினையினின்று தவறிப் போவேன்.

3. ஏனெனில் “மனிதனுடைய புலன்கள் அவனுடைய இளம் வயது முதற்கொண்டு தின்மையை நாடியிருக்கின்றன;” இத் தெய்வீக மருந்தின் உதவியினாலே தவிர மற்றபடி அவன் சீக்கிரத்தில் அதிக கெடுதியான பாவங்களில் விழுந்து விடுவான்.

திவ்விய நன்மை உட்கொள்ளுதல் தின்மையினின்று மீட்டு இரட்சிக்கின்றது, நன்மையில் உறுதிப்படுத்துகின்றது. ஆதலால் இப்போதே நான் நன்மை வாங்கியும் அல்லது பூசை செய்தும் இவ்வளவு அடிக்கடி அசட்டையும் வெதுவெதுப்புமாயிருக்க, தெய்வீக மருந்தை நான் சாப்பிடாமலும், இவ்வளவு பலத்த உதவியைத் தேடாமலும் இருந்தால், நான் என்னமாய் இருப்பேனோ?

நாள்தோறும் திவ்வியபூசை செய்ய, அல்லது திவ்விய நன்மை வாங்க என்னிடம் தகுதியான ஆயத்தமில்லாமலிருந்த போதிலும், இவ்வளவு பெரிய அநுக்கிரகத்திற்குப் பங்காளியாவதற்குத் தக்க நாட்களில் ஆகிலும் இந்தப் பரிசுத்த தேவத்திரவிய அநுமானத்தைப் பெற ஆசைப்படுவேன். ஏனெனில் பிரமாணிக்கமுள்ள ஆத்துமம் இந்த அழிவுக்குரிய சரீரத்தில் அடங்கி உமக்குத் தூரமாக இருக்கிற வரையிலும், அடிக்கடி தன்னுடைய தேவனை நினைத்துத் தனது நேசரைப் பக்தியுள்ள மனதோடு உட்கொள்வதே அதற்கு ஏகமும் பிரதானமுமான ஆறுதலாகின்றது. 

4. ஆண்டவராகிய சர்வேசுரா! சகல அரூபிகளையும் சிருஷ்டித்தவரும் அவற்றிற்கு உயிர் கொடுத்து வருபவருமாகிய நீர் எனது ஏழை ஆத்துமத்தில் எழுந்தருளி வரவும், உமது தெய்வீகத் தையும் மனுஷீகத்தையும் எல்லாம் கொண்டு அதன் பசியை ஆற்றவும் தயை புரிகிறீர்! ஓ, இது எங்கள் மட்டில் உமக்குள்ள அன்பின் ஆச்சரியத்திற்குரிய கருணையல்லவா!

ஆ! தன் ஆண்டவரும் தேவனுமான உம்மைப் பக்தியாய் உட்கொள்ளவும், உம்மை உட்கொண்டு ஞான சந்தோஷத்தால் பூரிக்கவும் பாத்திரமான ஆத்துமம் எவ்வளவோ பாக்கியமுள்ளது! அது உட்கொள்ளுகிற ஆண்டவர் எவ்வளவோ மகத்துவமுள்ளவர்! அது தன்னிடம் வரவழைக்கின்ற விருந்தாளி எவ்வளவோ அன்புள் ளவர்! அது கைக்கொள்கிற துணைவர் எவ்வளவோ அழகுள்ளவர்! அது பெற்றுக் கொள்ளுகிற சிநேகிதர் எவ்வளவோ பிரமாணிக்க முள்ளவர்! எவ்வளவோ அழகும் மேன்மையும் பொருந்திய பத்தாவை அரவணைத்துக் கொள்கிறது! ஆசிக்கப்படவும் நேசிக்கப் படவும் தக்கதான எவ்வஸ்துக்களையும் விட இவர் நேசிக்கப்பட எவ்வளவோ தகுதியுள்ளவர்!

மிக்க மதுரம் பொருந்திய என் அன்பரே, பரலோகமும் பூலோகமும் அவைகளின் அலங்காரம் அனைத்தும் உமது சந்நிதானத்தில் மவுனமாயிருக்கக்கடவன! ஏனெனில் அவைகளில் புகழ்ச்சிக்குரிய அலங்காரமாயிருப்பதெல்லாம் உமது தாராளத்தின் கிருபையினால் உண்டானதல்லாமல், அவை “அளவிறந்த ஞான முடைய” உமது சர்வ அலங்காரத்திற்கு ஒருக்காலும் இணையாக மாட்டாது.

யோசனை

ஆண்டவருடைய அப்பத்தைப் புசிப்பதற்கும் பாத்திரத்தைப் பானம் செய்வதற்கும் முந்தி, நம்மையே நாம் வெகு ஜாக்கிரதை யோடு பரிசோதித்துப் பார்க்க வேண்டியது. ஆயினும் யாதோர் பொய்யான வணக்கமாவது, மிதமிஞ்சின அச்சமாவது தேவ நற்கருணை வாங்குவதினின்று நம்மைத் தடுக்கும்படி விடக்கூடாது; நாம் என்னதான் செய்த போதிலும், இவ்வளவு மேலான தயவுக்கு நாம் ஒருபோதும் தகுதியுள்ளவர்களாகப் போவதில்லை. பரிசுத்ததனமா யிருக்கிறவருக்கு முன்பாக எவனும் சுத்தவானல்ல. எவனும் அர்ச்சியசிஷ்டவனல்ல. ஆனால் நமது இரட்சகர் நம்மை நோக்கி வாருங்கள் என்று அழைக்கும்போது, நமது நிர்ப்பாக்கியத்தை அறியாதவரல்ல; அதைக் குணப்படுத்துவதற்காகத்தான் நம்மைத் தம்மிடம் வரவழைக்கிறார். நாம் அவரை அண்டிப் போவோம். “மற்ற மனிதரைப் போல் தான் இராதிருப்பதற்காகச் சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரம்” செய்த கள்ள ஞானியான பரிசேயனைப் போலல்ல. தன் துர்க்குணங்களைத் தன்னுள்ளத்தில் மறைத்து வெளிக்கு வேஷங்காட்டும் கள்ளஞானிகளுடைய ஆங்காரத்தைச் சர்வேசுரன் வெறுக்கிறார். ஆனால் “கண்களைப் பூமியை நோக்கித் தாழ்த்தி” மனஸ்தாபத்தினால் மார்பில் தட்டிக்கொண்டு, “ஆண்டவரே! என் பேரில் இரக்கமாயிரும், இந்த நிர்ப்பாக்கியப் பாவிக்குத் தயை செய்தருளும்” என்று தாழ்ச்சியோடு வேண்டிக் கொண்ட ஆயக்காரனைப் போல் சர்வேசுரனை அண்டிப் போவோம். பாவசங்கீர்த்தனத்தினாலும், அமைதியினாலும் செபத் தினாலும், சேசுநாதருடைய திருச்சரீரத்தையும் இரத்தத்தையும் உட்கொள்வதற்கு நாம் ஆயத்தம் செய்ய வேண்டியது மெய்தான்; ஆனால் நம்மாலான மட்டும் முழு இருதயத்தோடு ஆயத்தம் செய்த பிறகு தேவ நற்கருணை வாங்குவதற்கு நாம் பின்வாங்கினால், விலையேறப்பெற்ற தேவப்பிரசாதங்களை நாம் இழந்து விடுவோம், ஞான ஜீவியத்தையே இழந்து போகிறோம். ஏனெனில் “மனுமக னுடைய மாமிசத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானஞ் செய்யாமலும் போனால் தன்னிடத்தில் ஜீவனைக் கொண் டிருப்பதில்லை;” பாவமுண்டான நாள் முதல் நம்மிடத்தில் உண்டான சாவின் காரணத்தை அழித்துவிடும்படியாக, நாம் இடை விடாமல் அவரை மன்றாடி வேண்டிக்கொள்ள வேண்டியது. இடை விடாமல் நாம் அவரை உட்கொள்ள வேண்டியது. “ஆண்டவரே! இந்த அப்பத்தை எங்களுக்கு எப்போதும் கொடுத்தருளும்; நித்திய ஜீவியத்தைக் கொடுக்குமென்று நீர் அறிவித்த அப்பத்தை எங்க ளுக்குத் தந்தருளும்,” என்று யூதர்கள் சொன்னார்கள். சேசுநாதர் சுவாமி சமாரியா தேசத்தாளை நோக்கி: “ஸ்திரீயே, நாம் கொடுக்கிற தண்ணீரைப் பானம் செய்கிறவன் ஒருபோதும் தாகமாயிருக்கப் போவதில்லை” என்றபோது, அவள்: “ஆண்டவரே! நான் இனிமேல் தாகமாயிராதபடிக்கும், இனிமேல் தண்ணீர் மொள்ள இவ்விடம் வராதிருக்கும்படிக்கும், எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடும்” என்றாள். மனித சுபாவம் எப்போதும் சந்தோஷத்தையும் சுகத்தையும் தேடுகின்றது. சேசுநாதர் ஞானத் தண்ணீரைப் பற்றிப் பேச, அவள் பூலோகத் தண்ணீரைப் பற்றி நினைக்கிறாள். மனிதனுக்கு இவ்வுலக பாக்கியங்கள் எவ்வளவுதான் இருந்தபோதிலும், பசியைப் போலவும் தாகத்தைப் போலவும் இருக்கிற அவனுடைய ஆசை ஒருபோதும் திருப்தியடைவதில்லை; இன்னும் வேண்டும், எப்போதும் வேண்டும், அதிகமதிகமாய் வேண்டும் என்கிறான். எப்போதும் பசியாயிரா திருக்க நீ ஆசிக்கிறாயோ? எப்போதும் தாகமாயிராதிருக்க நீ விரும்புகிறாயோ? அப்படியானால் அழியாத அப்பத்தை அண்டி வா! மனுமகனிடம் ஓடிவா! அவர் சத்தியமும் சீவியமும் நிறைந் திருக்கிற தமது மாமிசத்தையும் இரத்தத்தையும் உனக்குத் தந்தருளுவார். ஏனெனில் அது யூதர்கள் சொன்னது போல் சூசையப் பரின் குமாரனுடைய சரீரமும் இரத்தமுமல்ல, ஆனால் சர்வேசுர னுடைய குமாரனின் சரீரமும் இரத்தமுமாயிருக்கிறது. ஆண்டவரே! இந்த அப்பத்தை எனக்கு எப்போதும் தந்தருளும். இந்த அப்பத்தை உட்கொள்ள ஆசைப்படாதவன் யார்? இந்தத் திருப்பந்தியில் உட்காரச் சம்மதியாதவன் யார்? அதை எப்போதாவது விட்டுப் போகக் கூடுமானவன் யார்?