இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

03. தேவ வாக்கியங்களைத் தாழ்ச்சியோடு கேட்க வேண்டும். அநேகர் அவைகளைத் தக்கவண்ணம் மதியாமற் போகிறார்கள்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நம்முடைய வார்த்தைகளைக் கேள். அவ்வார்த்தைகள் மிகவும் மதுரமானவையாயும், உலக சாஸ்திரிகளுடையவும் ஞானிகளுடையவும் கல்வியைப் பார்க்கிலும் மேலானவையுமாயிருக்கின்றன. “நம்முடைய வார்த்தைகள் ஞானமும் உயிருமாயிருக்கின்றன.” அவை மனித புத்தியினால் சீர்தூக்கிப் பார்க்கத்தக்கவையல்ல. வீண்பிரியத்திற்காக அவைகளைப் பயன்படுத்தலாகாது. ஆனால் அவைகளை மெளனமாய்க் கேட்டு, மிக்க தாழ்ச்சியோடும் நேசப் பற்றுதலோடும் ஏற்றுக் கொள்ள வேண்டியது.

2. (ஆத்துமம்) “ஆண்டவரே! உம்மிடத்தில் கற்றுக்கொள் கிறவன் பாக்கியவான்; அவனுடைய கஷ்டமான நாட்களில் அவனுக்கு ஆறுதலாகவும் பூமியில் அவன் தனிமையாய்க் கைவிடப் படாதபடிக்கும் நீரே அவனுக்கு உமது கற்பனையைப் போதிப்பதால், அவன் பாக்கியவான்” என்றேன்.

3. (ஆண்டவர்): ஆதிமுதல் நாமே தீர்க்கதரிசிகளுக்குப் போதித் தோம்; இந்நாள் வரையிலும் சகலருக்கும் போதித்துக்கொண்டே வருகிறோம்; ஆனால் அநேகர் நமது வாக்கியங்களுக்குச் செவி கொடாமல் கல் நெஞ்சராய் இருக்கிறார்கள். அநேகர் சர்வேசுர னுக்குச் செவிகொடுப்பதைவிட உலகப் போதனைகளை அதிக ஆவலோடு ஏற்றுக்கொள்கிறார்கள்; தேவ சித்தத்தை நிறைவேற்று வதைவிடத் தங்களுடைய சரீர இச்சைகளை அதிக பிரியமாய்ப் பின்பற்றுகிறார்கள். உலகம் சொற்பமான அநித்திய நன்மைகளைப் பற்றி வாக்குத்தத்தம் செய்தும் அதற்கு மகா ஆவலோடு மனிதர்கள் ஊழியம் செய்வார்கள். நாமோ உத்தமமான நித்திய நன்மைகளை வாக்குத்தத்தம் செய்கிறோம், ஆயினும் மனிதன் இவைகளைக் கொஞ்ச மாவது கவனிப்பதில்லை. உலகத்திற்கும் உலக அதிகாரிகளுக்கும் ஊழியம் நடத்தி வருவது போல, எவன் அவ்வளவு ஜாக்கிரதையோடு நமக்கு ஊழியம் செய்து சகல விஷயங்களிலும் கீழ்ப்படிந்து நடக் கிறான்? “சியோன் நகரமே! வெட்கப்படக் கடவாய் என்கிறது சமுத் திரம்.” இதன் காரணம் அறிய வேண்டுமோ? ஏனென்று கேள். சொற்ப வெகுமானத்திற்காக வெகு தூரப் பயணம் செய்கிறார்கள்; நித்திய சீவியத்திற்காகவோ அநேகர் ஓர் அடி முதலாய் எடுத்து வைப்பதில்லை. அற்ப இலாபம் தேடுகிறார்கள்; ஒரு காசுக்காக வழக்கு செய்ய வெட்கப்படமாட்டார்கள்; வீணான சொற்பப் பொரு ளுக்காக இரவும் பகலும் வருந்தி உழைக்கப் பின்வாங்க மாட்டார்கள்.

4. ஆனால் ஐயோ! வெட்கக்கேடு! மாறாத நன்மைக்கோ, விலைமதிக்கப்படாத வெகுமானத்துக்கோ, உன்னத மாட்சிமைக்கோ, முடிவில்லாத மகிமைக்கோ, சொற்ப முயற்சி செய்யவும் சோம்பிக் கிடக்கிறார்கள். சோம்பேறியும் முறையிடுகிறவனுமான ஊழியனே! நித்திய சீவியத்தையடைய நீயெடுக்கிற முயற்சியை விட அதைப் போக்கடித்துக் கொள்ளச் சில மனிதர் அதிக முயற்சி செய்து வருவதைக் கண்டு நீ வெட்கப்படக் கடவாய்; சத்தியத்தின் மட்டில் நீ வைக்கிற கவனத்தை விட வீணான காரியங்களின் மட்டில் அவர்கள் அதிகமான கவனம் வைக்கிறார்கள். ஆயினும் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையில் பலதடவை மோசம் போகிறார்கள் அல்லவா? நாம் செய்த வாக்குத்தத்தத்தை நம்பி மோசம் போனவன் ஒருவனும் இல்லை; நம்மை நம்பினவன் ஒருக்காலும் வெறுங்கையாய்ப் போனதில்லை. எவன் கடைசி வரையில் நமது நேசத்தில் பிரமாணிக்கமாய் நிலைத்திருக்கிறானோ நாம் அவனுக்கு வாக்குத்தத்தம் செய்ததைக் கொடுப்போம், சொன்னதை நிறைவேற்றுவோம். பக்தியுள்ளவர்கள் எல்லாரையும் பலமாய்ப் பரிசோதித்து வருகிற நாமே நல்லவர்கள் எல்லாருக்கும் சம்பாவணை கொடுக்கிறவர்.

5. இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் பதியவை; கவனத்தோடு அவைகளைத் தியானித்துப் பார்; ஏனெனில் தந்திரச் சமயங்களில் அவைகள் உனக்கு மிகவும் அவசரமாகும். நீ வாசிக்கும் போது கண்டுபிடிக்காததை நாம் உன்னைச் சந்திக்கும் நாளில் அறிந்து கொள்வாய். தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நாம் சோதனை யினாலும், ஆறுதலினாலும், ஆக இருவிதமாய்ச் சந்திப்பதுண்டு. அவர்களுக்கு நாள்தோறும் இரண்டு பாடங்களைப் படிப்பிக் கிறோம்; ஒன்று அவர்களுடைய துர்க்குணங்களைக் கடிந்து கொள்வதாலும், மற்றொன்று அவர்களைப் புண்ணிய வழியில் வளரத் தூண்டுவதாலும். “நமது வார்த்தைகளைக் கேட்டும் அவைகளை அசட்டை செய்கிறவன் கடைசி நாளில் ஓர் நீதிபதியைக் காண்பான்.”

பக்தி என்னும் வரத்தை அடைய மன்றாட்டு

6. ஆண்டவராகிய என் சர்வேசுரா! நீரே என் சர்வ நன்மை, உம்மையண்டிப் பேசத் துணிய நான் மிகவும் சிறிய ஊழியன், நான் ஒரு நீசப் புழு, நான் அறிந்திருப்பதையும் சொல்லிக்கொள்ளத் துணிவதையும் விட அதிக ஏழையும் நிந்தைக்குரியவனுமாயிருக் கிறேன். ஆயினும் ஆண்டவரே! நான் ஒன்றுமில்லாமை, என்னிடம் ஒன்றுமில்லை, என்னால் ஒன்றும் ஆவதில்லை என்பதை நினைத்தருளும். நீர் ஒருவரே நல்லவர், நீதிமான், பரிசுத்தர்; சகலமும் உம்மாலாகும். சகலமும் தந்தருளுகிறீர்; எல்லாம் நிரப்புகிறீர்; பாவியை மாத்திரம் ஏழையாய் விடுகிறீர். ஆண்டவரே, உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும்; உம்மால் உண்டாக்கப்பட்டவைகள் வெறுமையா யிருக்க மனமில்லாதவரான தேவரீர், உமது வரப்பிரசாதத்தால் இருதயத்தை நிரப்பியருளும்.

7. உமது இரக்கமும் வரப்பிரசாதமும் என்னைப் பலப்படுத்தா விட்டால், எப்படி இந்த நிர்ப்பாக்கியமான சீவியத்திலே நான் என்னைச் சகித்து வரக்கூடும்! “என் ஆத்துமம் உமது சமூகத்தில் நீரில்லா நிலம்போல் ஆகாதபடி,” “உமது முகத்தை என்னிடத் தினின்று திருப்பிக் கொள்ளாதேயும். உமது ஆறுதலை என்னிட மிருந்து அகற்றி விடாதேயும். ஆண்டவரே! உமது சித்தத்தை நிறைவேற்ற எனக்குப் படிப்பித்தருளும், உமது சந்நிதானத்தில் தக்க மரியாதையோடும் தாழ்ச்சியோடும் நடந்துவர எனக்குப் படிப்பித் தருளும்; ஏனென்றால் நீரே என் ஞானம். பூலோகத்தில் நான் பிறக் கிறதற்கு முந்தியும் பூலோகம் உண்டாகிறதற்கு முந்தியுமே என்னையறிந்த நீரே என்னை உண்மையாகவே அறிந்திருக்கிறீர்.”

யோசனை

இரட்சணியத்தின் மட்டில் மெய்யான ஆசை வெகு அரிதா யிருக்கின்றது. நாம் செய்வதைக் கொண்டுதான் நமது கதி தீர்மான மாக வேண்டியபடியால் நாம் அஞ்சி நடக்க வேண்டிய நியாய முண்டு. சர்வேசுரன் நமக்கு உதவி புரிகிறார்; சுதந்தரமுடைய நமது மனதுக்கு தமது வரப்பிரசாதத்தைக் கொண்டு ஒத்தாசையாக வருகிறார்; ஆனால் அவர் அதைக் கட்டாயப்படுத்துவதில்லை. அப்படியிருக்க நாம் பார்க்கிறதென்ன? உலகத்தில் நாம் காண்கிற காட்சியென்ன? முழுமையும் மனம் பொருந்தி அக்கிரமத்தில் அமிழ்ந்தியிருக்கிறவர்களையும், ஏற்கனவே நித்திய கேட்டுக்கு உள்ளானவர்களையும் பற்றி இவ்விடத்தில் பேச்சில்லை. ஆனால் சேசுகிறீஸ்துநாதருடைய சீஷர்கள் என்று சொல்லிக்கொள் கிறவர்கள், தங்களை எண்ணுகிறவர்கள், இவர்களைப் பற்றிப் பேசுவோம். வெளிப் பார்வைக்கு இந்தக் கிறீஸ்தவர்கள் இரட்சணியமடைய விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அதே காலத்தில் ஆஸ்திகளையும், உலக சுக செல்வங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். இவர்கள் எப்போதாகிலும் சில செபங்கள் செய்வதுண்டு; கண்டிப்பான கற்பனைகளை அனுசரிப்பதுண்டு. இதுவே மோட்சம் போகிறதற்குப் போதுமானதென்று எண்ணியது போல மற்றக் காலமெல்லாம் உலகப் பெருமைகளைத் தேடுவதிலும், ஆஸ்தி சம்பாதிப்பதிலும் சுகசெல்வங்களை அனுபவிப்பதிலும் செலவழிக்கிறார்கள், அல்லது காலத்தை வீணில் போக்கு கிறார்கள். நித்தியத்தை நினைத்து நடக்கிறார்களோ? தேவசிநேகம் எங்கே? பிறர்சிநேகம் எங்கே? தபசு ஏது? சிலுவை ஏது? ஆ ஆண்டவரே! இதுதானோ இரட்சணியத்தின் ஆசை! “உயிரைக் காக்கத் தேடுகிறவன் அதையிழந்து விடுவான்” என்று எழுதப்பட்டிருக்கவில்லையோ? ஆண்டவர் தீர்வையிட வருகிறதற்கு முந்தியே ஒவ்வொருவனும் இவ்வாக்கியத்தை நன்றாய் யோசித்துப் பார்க்கக் கடவான்.