இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

02. சற்பிரசாதத்தில் சர்வேசுரன் மனிதனுக்குக் காண்பிக்கும் தயவும் நேசமும்.

1. (சீஷன்) ஆண்டவரே! உமது தயவின் பேரிலும் மிகுந்த இரக் கத்தின் பேரிலும் நம்பிக்கை வைத்து உம்மையண்டி வருகிறேன். வியாதியஸ்தனான நான் என் இரட்சகரிடத்திலும், பசியும் தாகமுமாயிருக்கிற நான் சீவியத்தின் ஊற்றிடத்திலும், ஏழையாகிய நான் பரலோக இராஜாவிடத்திலும், அடிமையாகிய நான் என் ஆண்டவரிடத்திலும், சிருஷ்டியாகிய நான் சிருஷ்டிகரிடத்திலும், துன்பங்களால் வருந்துகிற நான் எனது நேச தேற்றுகிறவரிடத்திலும் அண்டி வருகிறேன்.

ஆனால் நீர் என்னிடத்தில் எழுந்தருளிவர நான் பாக்கியம் பெற்றதெப்படி? நீர் உம்மையே எனக்குத் தந்தருள்வதற்கு நான் யார்? பாவியானவன் உமது சமூகத்தில் நிற்கத் துணிவதெப்படி? நீரும் பாவி யிடத்தில் வரச் சித்தமாவது எப்படி? நீர் அடியேனை அறிந்திருக் கிறீர்; நீர் எனக்கு இந்தக் கிருபை செய்கிறதற்கு என்னிடத்தில் நன்மை யானது ஒன்றும் கிடையாதென்றும் நீர் அறிவீர். ஆகையால் என் நீசத் தனத்தை ஏற்றுக் கொள்கிறேன், உமது தயாளத்தை அறிந்து கொள் கிறேன், உமது இரக்கத்தைப் புகழ்கிறேன், உமது அளவிறந்த நேசத் தைப் பற்றி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். ஏனெனில் என் பேறுபலனைப் பற்றியல்ல, ஆனால் உம்மைப் பற்றியே, அதாவது உமது தயாளம் அதிகமதிகமாய் எனக்கு விளங்கும்படியாகவும், தேவசிநேகம் என்னிடத்தில் அதிகரிக்கும்படியாகவும் தாழ்ச்சியைக் குறையற நான் அநுசரித்து வரும்படியாகவும் அந்த உபகாரம் செய் கிறீர். அப்படிச் செய்வது உமக்குப் பிரியமும் சித்தமுமாயிருக்க, நீர் செய்தருளும் நன்மையைச் சந்தோஷத்துடன் பெற மனதாயிருக் கிறேன். ஆனால் என் அக்கிரமம் இதற்குத் தடையாயிராமல் இருந்தா லல்லவோ நல்லது!

2. ஓ! மிகுந்த மதுரமும் தயையுமுள்ள சேசுவே! உமது திருச்சரீரத்தின் மகத்துவத்தை வருணித்துச் சொல்ல மனிதரில் எவனும் வல்லவனல்ல; இத்திருச் சரீரத்தை நான் உட்கொண்டு வருவதற்காக உமக்கு இடைவிடாத தோத்திரம் செய்து வருவதோடு எவ்வளவோ சங்கையும் நன்றியறிந்த தோத்திரமும் செய்ய வேண்டியிருக்கின்றது.

நான் என் ஆண்டவரைத் தக்கவிதமாய் ஆராதிக்கச் சக்தியுள்ளவ னல்ல, ஆயினும் பக்தியோடு அவரை உட்கொள்ள ஆசைப்படு கிறேன்; ஆதலால் தேவநற்கருணை வழியாய் அவர் என்னுள்ளத்தில் வரும்போது நான் என்ன நினைக்கப் போகிறேன்? உமது சமூகத்தில் என்னையே முழுதும் தாழ்த்தி, உமக்கு என் மேலுள்ள அளவிறந்த தயாளத்தை உயர்த்துவதைவிட அதிக பிரயோசனமும் உத்தமமு மான வேறென்ன நினைவு நான் நினைக்கப் போகிறேன்? ஆண்டவரே! நான் உம்மை வாழ்த்துகிறேன், சதாகாலத்திற்கும் உம்மைத் தோத்தரிக்க ஆசிக்கிறேன்; என் தாழ்மையையும் நீசத் தனத்தையும் நன்றாயறிந்து என்னை உமக்குக் கீழ்ப்படுத்துகிறேன்.

3. நீர் பரிசுத்தரில் உத்தம பரிசுத்தர், நானோ மகா பெரும் பாவியாயிருக்கிறேன். ஆயினும் இதோ உம்மை நோக்கிப் பார்க்கத் தகுதியற்றவனாகிய என்னைச் சந்திக்கும்படி நீர் உம்மைத் தாழ்த்தி வருகின்றீர்.

நீர் என்னிடம் வருகிறீர், என்னோடிருக்க ஆசைப்படுகிறீர், உமது பந்திக்கு என்னை அழைக்கிறீர். நான் உண்பதற்கு ஒரு பரலோக போசனம், “சம்மனசுக்களின் அப்பம்” அதாவது “பரலோகத் தினின்று இறங்கி உலகத்திற்கு ஜீவியம் கொடுக்கிற உயிருள்ள அப்பமாகிய” உம்மையே எனக்குத் தந்தருளச் சித்தமாகிறீர்.

4. அதுதான் உமது நேசத்தின் அடையாளம், உமது உந்நத தயாளத்தின் விளக்கம்! கைம்மாறாக உமக்கு எவ்வளவோ பலத்த நன்றியறிந்த தோத்திரமும் துதியும் செலுத்தப்பட வேண்டியது.

ஓ! இந்தத் தேவத்திரவிய அநுமானத்தை நீர் ஏற்படுத்தின கருத்து எவ்வளவோ உத்தமமும் பிரயோசனமுமான கருத்து. உம்மையே நீர் போசனமாகக் கொடுத்தபோது அது எவ்வளவோ இன்பமும் மதுரமு மான விருந்து.

ஓ! ஆண்டவரே! உமது செயல் எவ்வளவோ ஆச்சரியத்திற் குரியது! உமது புண்ணியம் எவ்வளவோ வல்லபமுள்ளது! உமது சத்தியம் எவ்வளவோ தவறாதது! ஏனெனில் “நீர் சொன்னீர்;” சகலமும் உண்டாயிற்று; நீர் கட்டளையிட்டதெல்லாம் செய்யப்பட்டன.

5. என் ஆண்டவராகிய சர்வேசுரா! மெய்யான தேவனும் மெய்யான மனிதனும் ஒன்றாகிய நீர் முழுமையும் கொஞ்சம் அப்பக் குணங்களுக்குள்ளேயும், கொஞ்சம் இரசக் குணங்களுக்குள்ளேயும் அடங்கியிருப்பதும், உட்கொள்கிறவன் உம்மைப் புசித்தாலும், நீர் கொஞ்சம் கூடக் குறைந்துபோகாதிருப்பதும், மனிதப் புத்திக் கெட்டாததும் எல்லாரும் விசுவசிக்க வேண்டியதுமான ஆச்சரியத் துக்குரிய காரியம்.

சர்வத்திற்கும் ஆண்டவரே! எவருடைய ஒத்தாசையும் உமக்கு அவசியமில்லை. ஆயினும் நீர் தேவநற்கருணையின் வழியாய் எங்களில் வாசம் செய்யச் சித்தமானீரே; உமது மகிமைக்காகவும் உமது நேசத்தின் இடைவிடாத ஞாபகத்திற்காகவும் நீர் விசேஷமாய் திட்டம் செய்து ஏற்படுத்தின உமது பரமபலியை, நான் சந்தோஷமும் பரிசுத்தமுமான மனச்சாட்சியோடு என் நித்திய இரட்சணியத் திற்காக அடிக்கடி நிறைவேற்றக் கூடுமாயிருக்கும்படி, என் ஆத்துமத் தையும் சரீரத்தையும் மாசின்றிக் காப்பாற்றியருளும். என் ஆத்துமமே! இந்தக் கண்ணீர்க் கணவாயில் உனக்கு இவ்வளவு உந்நத வரமும் பெரிதான ஆறுதலும் அளிக்கப்பட்டதை நினைத்துச் சந்தோஷித்து தேவனுக்கு நன்றி செலுத்து. ஏனெனில் இந்தப் பரம இரகசியத்தை நிறைவேற்றிக் கொண்டு, சேசுகிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தை உட்கொண்டு வரும்போதெல்லாம், உன் இரட்சணியத்தைப் பூர்த்தி யாக்குகிறாய், கிறீஸ்துநாதருடைய பேறுபலன்களுக்கெல்லாம் பங்காளியாகிறாய்; ஏனென்றால் கிறீஸ்துநாதருடைய நேசம் ஒருபோதும் குறைவதில்லை, அவருடைய அளவிறந்த தயாளங்கள் ஒருபோதும் வற்றிப் போவதில்லை.

ஆனதால் எப்போதும் புது இருதயத்தோடு நீ அந்த உந்நதச் செய லுக்கு உன்னை ஆயத்தப்படுத்த வேண்டியது; இரட்சணியத்தின் மகத்தான அப்பரம இரகசியத்தை மிகுந்த கவனத்தோடு தியானிக் கவும் வேண்டியது. நீ பூசை செய்தால் அல்லது கண்டால் உனக்கு அது எப்படி காணப்பட வேண்டுமென்றால், அதே நாளில் கிறீஸ்து நாதர் பரிசுத்த கன்னிகையின் உதரத்தில் முதல் முறை இறங்கி மனிதனானது போலாவது, அவர் சிலுவையில் தொங்கி மனிதர் இரட்சணியத்திற்காகப் பாடுபட்டு மரித்தது போலாவது அவ்வளவு மேன்மையானதாகவும் நூதனமாகவும் சந்தோஷத்துக்குரியதாகவும் காணப்பட வேண்டியது. 

யோசனை

அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் பரவசமாகி பரலோக ஜெருசலேமுக்குக் கொண்டு போகப்பட்டு, சர்வேசுரனுடைய சிம்மாசனத்தின் நடுவில் தொண்டை அறுக்கப்பட்டது போல ஒரு செம்மறிப் புருவையையும், தன்னைச் சுற்றிச் சர்வேசுரனால் பூலோகமெங்கும் அனுப்பப்படும் ஏழு அரூபிகளையும், இருபத்து நான்கு வயோதிபரையும் கண்டார். இந்த வயோதிபர்கள் செம்மறிப் புருவைக்கு முன்பாகச் சாஷ்டாங்கம் செய்தார்கள். தங்கள் கைகளில் வீணைகளையும், அர்ச்சியசிஷ்டவர்களின் செபங்களாகிய பரிமளங்கள் நிறைந்த பாத்திரங்களையும் வைத்திருந்தார்கள். கொலை செய்யப்பட்டுச் சகல ஜாதி மனிதருக்குள்ளாக நம்மை இரட்சித் தவருக்குத் தோத்திரமாக ஒரு புதிய பாடல் பாடினார்கள். மேலும் கோடானுகோடி சம்மனசுகள் ஒருவாய்ப்பட: “கொலையுண்ட செம்மறிப்புருவை, வல்லபத்திற்கும், மகத்துவத்திற்கும், ஞானத் திற்கும், பலத்திற்கும், பெருமைக்கும், மகிமைக்கும், தோத்திரத்தி ற்கும் பாத்திரமானவர்” என்றார்கள். வான மண்டலத்திலும் பூமண்டலத்திலும், கடலிலும் தரையிலும் எங்குமிருக்கும் சிருஷ்டி களெல்லாம் வாய் திறந்து: “சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவருக்கும் செம்மறிப்புருவைக்கும் தோத்திரமும், துதியும் மகிமையும் வல்லபமும் சதாகாலத்திற்கும் உண்டாகக்கடவன” என்று கூறின. இப்போது வேறோர் காட்சியைப் பாருங்கள். நித்திய சிம்மாசனத்தில் சம்மனசுகளாலும் அர்ச்சியசிஷ்டவர்களாலும் ஆராதிக்கப்பட்டு பரலோக மகிமையால் சூழப்பட்டிருக்கிற அந்த செம்மறிப்புருவை “வெகு அன்போடு நம்மிடத்தில் வருகிறார்.” கொஞ்ச அப்பத்தின் குணங்களுக்குள்ளாக மறைந்திருக்கிறார், ஏழை சிருஷ்டிகளுக்குத் தம்மைக் கொடுக்கிறார், நமது ஆத்துமத்தைச் சுத்திகரிக்கிறார். அதன் போசனமாகிறார். அவருடைய மாமிசம் நமது மாமிசத் தோடும், அவருடைய இரத்தம் நமது இரத்தத்தோடும் மெய்யாகவே ஒன்றிப்பதனால் நமது சரீரத்திற்கும் போசனமாகிறார். அவர் நமதுள்ளத்தில் திரும்ப அவதாரமெடுக்கிறார் என்றே சொல்லலாம். ஓ! கண்டு பிடிக்கக்கூடாத பரமஇரகசியமே! ஓ! கிறீஸ்துவே! சுயஞ் சீவியராகிய சர்வேசுரனுடைய குமாரனே! உமது வழிகள் ஆச்சரியத் திற்குரியவை! இந்தப் புத்திக்கெட்டாத பரம இரகசியத்தை எனக்கு விவரித்துக் காட்டக் கூடுமானவன் யார்? நான் வானமண்டல மேறினால் அங்கே நித்திய பிதா வின் மடியில் சோதிப்பிரதாபத் தோடு நீர் வீற்றிருப்பதைக் காண்கிறேன். பூலோகத்திற்கு இறங்கி வந்தாலோ, ஏழையும் நிர்ப்பாக்கியனுமான பாவியின் உள்ளத்தில் உம்மைக் காண்கிறேன். ஒரு பக்கத்தில் மகிமையின் அளவில்லாத் தனத்திலும், மற்றோர் பக்கத்தில் நீசத்தனத்தின் அளவில்லாத் தனத் திலும் உம்மைக் காண்கிறேன். கெட்டுப்போன நீச மனிதன் ஆசித்து உம்மை அழைக்கும்போது அவனிடத்தில் நீர் வருவது போதா தென்றது போல, நீரே முந்தி அவனை அன்போடு திரும்பத் திரும்ப அழைக்கிறீர்; “துன்பப்படுகிறவர்கள் அனைவரும் நம்மிடத்தில் வாருங்கள், நாம் உங்களைத் தேற்றுவோம்; வாருங்கள், இந்தப் பாஸ்காவை உங்களோடு புசிக்க வெகு ஆவலோடு ஆசித்தோம்” என்று சொல்லி அழைக்கிறீர். போதும் ஆண்டவரே! போதும்! நீர் யாரென்று நினைவு கூர்ந்தருளும். நான் பாவி, நீசன்; ஆனாலும் நான் உம்மை அண்டி வரும்போது, சம்மனசுக்களைப் போல வணக்கத் தோடும், அச்சத்தோடும், நடுநடுக்கத்தோடும் வரும்படி கிருபை செய்தருளும். என் நீசத்தனத்தை நானறிந்து உமது இரக்கத்தின் பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைத்துத் தேவசிநேக மிகுதி யினால் பற்றியெரிந்து உம்மை அண்டி வரும்படி எனக்குத் தயை செய்தருளும். ஆமென் சேசு.