இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

02. சத்தியமானவர், பேச்சு சந்தடியில்லாமல் உள்ளத்தில் உரையாடுகிறார்

1. “ஆண்டவரே! திருவாய் மலர்ந்தருளும்; உமது ஊழியன் செவி கொடுக்கிறான். நான் உமது ஊழியன், உமது போதனையை அறியும்படி எனக்குப் புத்தி தந்தருளும். உமது திருவாக்கியங்களின் பேரில் என் இருதயம் நாடும்படிச் செய்யும்; இதன்மேல் அவைகள் பனிபோல் சொரியக் கடவன.” பூர்வத்தில் இஸ்றாயேல் மக்கள் மோயீசனுக்குச் சொன்னதாவது: “நீர் எங்களிடம் பேச வேண்டாம், பேசினால் எங்கள் உயிர் போகும்” என்றார்கள். அவர்களைப் போலல்ல, ஆண்டவரே, நான் இப்போது மன்றாடுவது. ஆனால் சாமுவேல் என்பவரைப் போலத் தாழ்ச்சி யோடும் ஆசையோடும் “ஆண்டவரே, பேசும், உமது ஊழியன் செவிகொடுக்கிறான்” என்று மன்றாடுகிறேன். மோயீசனாவது தீர்க்க தரிசிகளில் ஒருவராவது என்னுடன் பேச வேண்டாம்; ஆனால் சகல தீர்க்கதரிசிகளுக்கும் ஏவுதலாகவும் பிரகாசமாகவும் இருக்கிற என் ஆண்டவராகிய சர்வேசுரா! நீரே என்னிடத்தில் பேசும்; ஏனெனில், அவர்கள் உதவியின்றி நீர் ஒருவரே எனக்குக் குறையறக் கற்பிக்க வல்லவர்; அவர்களோ உமது ஒத்தாசையின்றி எனக்கு யாதொரு உதவியுமாயிருக்க முடியாது.

2. வார்த்தைகள் செவிக்கு எட்டும்படி அவர்களால் செய்யக் கூடும், ஆனால் (அவைகளைக் கண்டுபிடிக்க) சக்தியை அளிப்பது அவர்களால் முடியாது. அலங்காரமாய்ப் பேசுவார்கள், ஆனால் நீர் கூட பேசாவிடில் இருதயம் உருகும்படி அவர்கள் செய்வதில்லை. அவர்கள் எழுத்தைக் கொண்டு உம்முடைய வாக்கியத்தை வெளிப் படுத்துவார்கள், ஆனால் அதன் கருத்தை நீரே தெரிவிக்கிறீர். இரகசியங்களை அறிவிக்கிறார்கள், நீரே அவைகளின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கச் செய்வீர். உமது கற்பனைகளைத் தெரிவிக்கிறார்கள், ஆனால் அவைகளை நிறைவேற்ற உதவி செய்கிறவர் நீரே. வழிகாட்டு கிறார்கள், நீரோ அதில் நடக்கப் பலம் கொடுக்கிறீர். அவர்கள் வெளி வேலை மாத்திரம் செய்கிறார்கள். நீரோ மனதுக்கு அறிவு புகட்டிப் பிரகாசம் கொடுக்கிறீர். அவர்கள் மேற்பரப்பில் நீர்பாய்ச்சுகிறார்கள், ஆனால் செழுமை தருகிறவர் நீரே. அவர்கள் என் செவியில் விழும் படியாக சத்தமிடுகிறார்கள், நான் கேட்டதைக் கண்டுபிடிக்கும் வல்லமையைத் தந்தருளுகிறவர் நீரே.

3. ஆனதால் மோயீசன் என்னோடு பேச வேண்டாம்; நான் வெளிக் காதாலே மாத்திரம் போதகங்களைக் கேட்டு, உள்ளுக்குள் தெளிவடையாவிட்டால் பலன் தராமல் போவேனே; அப்போது உமது வாக்கியத்தைக் கேட்டும் நிறைவேற்றாமலும், அறிந்தும் நேசிக்காமலும், விசுவசித்தும் அநுசரிக்காமலும் நடப்பதால் அது என்னுடைய தீர்வைக்குக் காரணமாய் இருக்குமே. ஆதலால் அப்படி நேரிடாதபடி நித்திய சத்தியமாயிருக்கிற என் ஆண்டவராகிய சர்வேசுரா! நீரே என்னிடம் பேசுவீராக. “ஆண்டவரே பேசும்; உமது ஊழியன் உமக்குச் செவிகொடுக்கிறான்; ஏனெனில் உம்மிடம் நித்திய சீவியத்தின் வார்த்தைகளுண்டு.” என் ஆத்துமம் கொஞ்சம் ஆறுதலடையும்படியாகவும் நான் என் முழு சீவியத்தைச் சீர்த்திருத்தும்படியாகவும் நீர் என்னிடம் பேசும்; அப்போது என்னாலே உமக்குப் புகழ்ச்சியும் மகிமையும் பெருமையும் நித்தியமாய் உண்டாகும்.

யோசனை 

சிருஷ்டிகளுக்கு நமது செவிகளை மூடி, சர்வேசுரன் சொல்வதை மாத்திரம் கேட்க நாம் விரும்பி, நமதாசையெல்லாம் கொண்டு நாம் அவரை அழைக்கும்போது, நம் உள்ளத்தில், அதாவது ஆத்துமத்தின் உள்ளாந்தரத்தில் பேசுகிற சப்தம் ஒன்றுண்டு. இந்தச் சப்தம்தான் வனாந்தரத்தில் அர்ச். சின்னப்பர், அந்தோணியார், பங்கோமியார் இன்னும் இவர்களைப் போன்ற வனவாசிகளை ஆனந்தப் பரவசத்துக் குள்ளாக்கி வேதசாஸ்திரத்தின் இரகசியங்களை அவர்களுக்குத் தெளி வாய் வெளிப்படுத்தினது. இந்தச் சப்தம்தான் அர்ச்சியசிஷ்டவர் களுக்கு சத்தியங்களைப் போதிக்கின்றது; அவர்களிடத்தில் தேவ அக்கினியை மூட்டுகின்றது; அவர்களுக்கு ஆறுதல் வருத்துவிக் கின்றது; பரலோக இன்பத்தால் அவர்களை மயக்குகின்றது என்றே சொல்லலாம். எம்மாவுஸ் பட்டணம் சென்ற சீடர்கள் மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் அறிந்தவர்களல்ல. சேசுநாதர் வருகிறார். அவர் சொல்லுவதை அவர்கள் கேட்ட மாத்திரத்தில் அவர்களுடைய புத்தி தெளிவாகின்றது. தங்கள் உள்ளத்தில் தாங்கள் அறியாத ஏதோ உணர்ச்சியைக் கண்டு, “வழியில் அவர் நம்மோடு பேசி, வேத வாக்கியங்களை நமக்குத் தெளிவிக்கும்போது நம்முடைய இருதயம் நமக்குள் பற்றியெரிந்து கொண்டிருந்ததல்லவோ” என ஒருவருக் கொருவர் சொல்லிக் கொண்டார்கள். நமக்கோ இவ்வுலகச் சந்தடிகள் இன்னும் நம்மைத் தொடர்ந்து நம்மை வருத்துகின்றன; நாம் என்ன செய்வோம்? சேசுநாதர் சொல்வதைக் கேட்க நமக்கு மனமில்லையோ? அவ்விரு சீஷரைப் போல நாமும் பிரயாணம் செய்கிறோம்; நித்தியத்தை நோக்கி நடக்கிறோம். சேசுநாதர் அன்பின் நிமித்தம் நம்மருகில் வந்து நமக்கு வழித்துணை போலாகிறார். ஆனால் அவர் சொல்வதை நாம் கவனியாததால் அவர் நம்மை விட்டகன்று போய்விடுகிறார்; நாம் தனிவழி நடக்கிறோம்; பயங்கரத் துக்குரிய தனிவழி! நாம் ஊர் சேர்வதற்கு முந்தியே இரவு வராதபடி ஜாக்கிரதையாய் இருந்து, தேவத் துணைவரைத் திரும்பவும் கூப்பிடத் தீவிரிப்போம். அவரை நோக்கி நமது முழு ஆத்துமத்தோடு: “ஆண்டவரே! எங்களோடு தங்கியிரும்; பொழுது போகின்றது; இருட்டும் வேளையாகிறது” என்று சொல்லக் கடவோம்.