இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

02. தாழ்ச்சியுள்ள சிரவணம்

1. உனக்கு ஆதரவாக இருக்கிறது யார், விரோதமாயிருக்கிறது யார் என்று அதிக யோசனை பண்ணாதே. ஆனால் நீ செய்வதெல்லாவற்றிலும் சர்வேசுரன் உன்னுடன் இருக்கும்படி பார். உன்னிடத்தில் நல்ல மனச்சாட்சி உண்டானால் சர்வேசுரன் உன்னைத் தப்பாமல் காப்பாற்றுவார். எவனுக்குச் சர்வேசுரன் உதவி செய்கிறாரோ, அவனுக்கு யாதொருவனுடைய துஷ்டத்தனமும் நஷ்டப்படுத்தாது. முறையிடாமல் எதையும் சகிக்க உனக்குத் தெரியுமானால் சர்வேசுரனுடைய உதவியைச் சந்தேகமறக் காண்பாய். உன்னை மீட்க வேண்டிய காலமும் வகையும் அவர் அறிவார்; ஆனதால் அவருக்கு உன்னைக் கையளித்துவிட வேண்டியது. உதவியும் சகல கலக்கத்திலும் நின்று மீட்டலும் சர்வேசுரனாலேதான் உண்டாகிறது. மற்றவர்கள் நமது குறைகளை அறிந்து நம்மைக் கண்டிப்பது நாம் உத்தம தாழ்ச்சியைக் காப்பாற்றுவதற்கு அநேகமுறை வெகு பிரயோசனமாயிருக்கின்றது.

2. தன் குற்றங்களைப் பற்றித் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவன் தன் அயலாரை எளிதில் சாந்தப்படுத்துவான். தாழ்ச்சியுள்ளவனைச் சர்வேசுரன் காப்பாற்றி மீட்கிறார்; தாழ்ச்சியுள்ளவனை நேசித்துத் தேறுதல் செய்கிறார். தாழ்ச்சியுள்ளவனை அவர் நேசத்தோடு ஆதரிக்கிறார்; தாழ்ச்சியுள்ளவனுக்கு ஏராளமான வரப்பிரசாதங்களை அளிக்கிறார்; அவனைத் தாழ்த்தின பிறகு அவனை மகிமையில் உயர்த்துகிறார்; தாழ்ச்சியுள்ளவனுக்குத் தமது இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்; அவனை நேசத்தோடு அழைத்து தம்மிடம் இழுத்துக் கொள்கிறார். தாழ்ச்சியுள்ளவன் மனுஷர் பேரில் அல்ல, ஆனால் சர்வேசுரன்பேரில் ஊன்றி நிற்பதால், தனக்கு அவமானம் உண்டாகியும் அவன் சமாதானத்தில் நிலைத்திருக்கிறான். நீ எல்லோரிலும் தாழ்ந்தவனாய் இருப்பதை உணர்ந்தாலொழிய, புண்ணியத்தில் யாதொரு வளர்ச்சியையும் அடைந்ததாக நீ எண்ண முடியாது. 

யோசனை

மனிதருடைய உரையாடல்களாலும், யோசனைகளாலும் உனக்குண்டாகும் பிரயோசனமென்ன? அவர்களல்ல உன்னைத் தீர்மானிக்கிறவர்கள். அவர்கள் உன்பேரில் அநியாயமாய்க் குற்றம் சாட்டினால், மனசாட்சியின் உள்ளத்தை அறிந்திருக்கும் கடவுள் உன்பேரில் குற்றம் சாட்டுவதில்லை. நியாயத்தோடு அவர்கள் உன்பேரில் குற்றம் சாட்டினால், உண்மையை அறிவது உனக்கு நலமான காரியமல்லவா? நிந்தை அனுபவிப்பது உன் ஆத்துமத்திற்குப் பயன்படுமல்லவா? நிந்தையைச் சகிக்க மனமில்லாதது ஆங்காரமல்லவா? அது உன்னைக் கலங்கச் செய்கிறது. அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், தாழ்ச்சியுள்ளவன் கோபம் கொள்வதில்லை. அதனால் கலக்கமடைவதில்லை. தன்னுடைய நிர்ப்பாக்கிய அந்தஸ்தை நன்றாய் அறிந்து கண்டுபிடிக்கிறவன் தன்னையே தாழ்த்திக் கொள்கிற அளவு மற்றவர்கள் ஒருபோதும் அவனைத் தாழ்த்தப் போவதில்லை. உன் ஆத்தும அமைதி கெடாமலிருக்க வேண்டு மென்ற மனது உனக்கு உண்டானால் சகல காரியங்களிலும் சர்வேசுர னுக்கு உன்னைக் கையளித்து விடு; கஸ்தியிலும் துன்பங்களிலும் விரோதங்களிலும், பிதாவே! உமது சித்தப்படியே ஆகக்கடவது என்று சேசுகிறீஸ்துநாதரோடு சொல்லு.