1. “என் ஆண்டவராகிய சர்வேசுரன் என் உள்ளத்தில் திருவுளம் பற்றுவது என்னவென்று செவிகொடுப்பேன்.” தன் உள்ளத்தில் உரையாடும் ஆண்டவருக்குச் செவிகொடுத்து, அவருடைய வாயினின்று வரும் ஆறுதலான வாக்கியத்தை ஏற்றுக் கொள்ளுகிறவன் எவனோ அவனே பாக்கியவான். தேவனுடைய மெதுவான மொழிகளைக் கேட்டு, இவ்வுலக வீண் செய்திகளைக் கவனிக்காத செவிகள் பாக்கியம் பெற்றவை. வெளியில் ஒலிக்கிற சப்தத்தையல்ல, ஆனால் உள்ளத்தில் போதிக்கிற சத்தியத்தைக் கேட்கிற செவிகள் முற்றிலும் பாக்கியம் பெற்றவை. வெளிக்காரியங்களுக்கு மூடியிருந்து, உட்காரியங்களுக்கு விரியத் திறந்திருக்கும் கண்கள் பாக்கியம் பெற்றவை. ஆத்துமத்தின் உட்காரியங்களில் பிரவேசித்து, பரலோக இரகசியங்களைக் கண்டு பிடிக்கிறதற்காக அனுதின முயற்சிகளால் தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறவன் பாக்கியவான். உலக கவலைகளை நீக்கிவிட்டு, சந்தோஷ மனதோடு சர்வேசுரனையே நினைத்துக் கவனிக்கிறவன் பாக்கியவான்.
2. என் ஆத்துமமே! அதையெல்லாம் கவனி; “உன் ஆண்டவ ராகிய சர்வேசுரன் உன் உள்ளத்தில் என்ன சொல்கிறார்” என்று நீ கேட்கக் கூடுமாயிருக்கும்படி, உன் புலன்களின் வாசல்களை அடைத்து விடு. உன் அன்பர் சொல்வதாவது: நாமே உன் இரட்சணியமும், சமாதானமும் உன் சீவியமுமாக இருக்கிறோம், நம்மை அண்டியிரு, சமாதானத்தை அடைவாய். கடந்துபோகும் காரியங்களை விட்டு விடு, நித்திய நன்மைகளை மட்டும் தேடு. உலகக் காரியங்களெல்லாம் பாவத்திற்கு இழுக்கிறவைகளேயன்றி வேறென்ன? நீ உன் சிருஷ்டிகரால் கைவிடப்பட்டிருப்பாய் என்றால் சிருஷ்டிப்பு களெல்லாம் உனக்கு எதற்கு உதவும்? ஆகையால் நீ மெய்யான பாக்கியத்தைக் கைக்கொள்ளக் கூடுமாயிருக்கும்படி, சகலத்தையும் வெறுத்து விட்டு, உன் சிருஷ்டிகருக்குப் பிரியமும் பிரமாணிக்கமு மாக நடக்கக் கடவாய் என்கிறார்.
யோசனை
சிருஷ்டிக்கப்படாத ஞானம் சொல்லுவதைக் கேள்: “மனித ருடைய மக்களோடிருப்பதே எனக்கு இன்பமாயிருக்கின்றது” என்கிறது. ஆனால் மனிதரில் அநேகர் அதன் பாஷையைக் கண்டு பிடிக்காததினால், சிருஷ்டிப்புகளோடு உறவாடும்படியாக ஞானத்தை விட்டு அகன்று போகிறார்கள். ஞானம் உலகத்தில் வந்தும் உலகம் அதை அறிந்ததில்லை. இதனாலேயே உலகத்தையாவது உலகத் திலுள்ள எதையாவது நேசிக்கத் தகாதென்று அப்போஸ்தலர் கூறுகின்றார். “ஏனென்றால் அது துர்மனப் பேய்க்கு முழுமையும் சொந்தமாயிருக்கின்றது” என்கிறார். ஆனதால் சகல காரியங்களையும் போதிக்கும் தேவ ஞானத்தை நாம் அடைய விரும்புவோமானால், உலகத்தினின்று நாம் பிரிந்து போக வேண்டியது. உலகப் போதனை களையும், சுகசெல்வங்களையும் சந்தடிகளையும் நாம் விட்டு வெறுக்க வேண்டியது. சேசுநாதர் வனாந்தரத்தில் மட்டும் வசிக்கிறார். “அவரது சப்தம் வெளியரங்கமான பொது இடங்களில் கேட்கப்படுவதில்லை” ஆனால் அவர் தமது வரங்களைப் பிரமாணிக்கமுள்ள ஆத்துமத்தில் பொழிந்தருள தீர்மானிக்கும்போது, அவ்வாத்துமத்தை ஏகாந்தத்தில் கூட்டிப் போய் அங்கே இருதயத்துடன் உரையாடுகிறார். இந்தத் தெய்வீக உரையாடலின் இன்பத்தை வருணிப்பதெப்படி? ஒரு முறை அதை சுகித்தவன் மனிதருடைய உரையாடலில் பிரியம் கொள்ள மாட்டான். ஓ, சேசுவே! என் இருதயத்தோடு பேசும்; இனிமேல் சிருஷ்டிப்புகளை எல்லாம் விட்டு விட்டு, நீர் சொல்லுவதை மாத்திரம் கேட்கத் தீர்மானித்திருக்கிறேன்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠