இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

01. கிறீஸ்துநாதரை வெகு மரியாதையோடு உட்கொள்ள வேண்டியது.

1. (சீஷன்) அநாதி சத்தியமாகிய கிறீஸ்துவே! மேற் சொன்ன வாக்கியங்கள் ஒரே காலத்தில் சொல்லப்படாவிட்டாலும், உமது வாக்கியங்கள்தானல்லவா, அவை உம்மால் சொல்லப்பட்டவையும் உண்மையுமானவையாய் இருக்கையில், அவை யாவற்றையும் நான் நன்றியோடும் விசுவாசத்தோடும் ஏற்றுக்கொள்ள வேண்டியது. அவை உம்முடையவைதான். ஏனெனில் நீரே அவைகளை உரைத்தீர்; ஆனால் என்னுடையவையுமாய் இருக்கின்றன, ஏனெனில் என் இரட்சணியத்திற்காக அவைகளை நீர் உரைத்திருக்கிறீர். என் இருதயத்தில் அவை ஆழமாய்ப் பதியத்தக்கதாய், உமது வாயினின்று அவைகளைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வளவு தயை இனிமை நேசம் நிறைந்த அவ்வாக்கியங்கள் என்னைத் தூண்டுகின்றன, ஆனால் என் பாவங்களை நினைத்து அச்சப்படுகிறேன்: இவ்வளவு மகத்தான தேவதிரவிய அனுமானத்தை நான் பெறாதபடி என் அசுத்த மனச்சாட்சி என்னைத் தடுக்கின்றது. உமது வாக்கியங்களின் இன்பம் என்னை அழைக்கின்றது. ஆனால் என் பாவங்களின் திரள் என்னை நிறுத்துகின்றது.

2. உம்முடன் நான் பங்கடைய வேண்டுமானால் நான் முழு நம்பிக்கையோடு உம்மை அண்டி வர வேண்டும் என்றும், நித்திய சீவியத்தையும் மகிமையையும் அடைய எனக்கு ஆசையுண்டானால் சாகாத வரத்தைப் பெற்றுத் தரும் போசனத்தை நான் உட்கொள்ள வேண்டுமென்றும் கற்பிக்கிறீர். “வருந்திச் சுமை சுமக்கிறவர்களே! நீங்கள் அனைவரும் நம்மிடம் வாருங்கள், நாம் உங்களுக்கு இளைப் பாற்றியைக் கட்டளையிடுவோம்” என்கிறீர். ஓ! பாவியின் காதுக்கு இனிமையும் நேசமுமுள்ள வாக்கியமே! என் ஆண்டவராகிய சர்வேசுரா! ஏழையும் தரித்திரனுமானவனை உமது மிகவும் பரிசுத்த சரீரத்தின் சற்பிரசாத விருந்துக்கு அழைக்கிறீர். ஆனால் ஆண்டவரே! உம்மிடம் வரத் துணிய நான் யார்? இதோ, “உந்நத வான மண்டலங் களில் நீர் அடங்கினவரல்ல,” ஆயினும் “நம்மிடத்தில் அனைவரும் வாருங்கள்” என்றழைக்கிறீர்.

3. இவ்வளவு இரக்கமுள்ள கிருபைக்கும், இம்மாத்திரம் நேச முள்ள அழைப்புக்கும் காரணமென்ன? நான் உம்மிடத்தில் வர எப்படித் துணிவேன்? என்னைத் தைரியப்படுத்தக் கூடிய யாதொரு நன்மை என்னிடத்தில் இல்லையே. உமது மிகவும் தயை நிறைந்த சமூகத்தில் அடிக்கடி துரோகம் கட்டிக்கொண்ட நான் உம்மை எவ்விதம் என் வீட்டில் வரவழைப்பேன்? தூதரும் அதிதூதரும் உம்மை நடுநடுங்கி வணங்குகிறார்கள், அர்ச்சியசிஷ்டவர்களும் நீதிமான் களும் உமக்கு அஞ்சுகிறார்கள்; நீரோ “அனைவரும் நம்மிடம் வாருங்கள்” என்கிறீர். ஆண்டவரே! நீரே அதைச் சொல்லாவிட்டால் அது மெய்யென்று எவன் நம்பக் கூடும்! நீரே கட்டளையிடா விட்டால் உமதருகில் வர எவன் துணிவான்!

4. இதோ! நீதிமானான நோவே சொற்ப சனங்களுடன் மரணத்திற்குத் தப்பித்துக்கொள்ளும்படியாய்ப் பெட்டகம் செய் வதில் நூறு வருஷ காலம் உழைத்தார்; நானோ உலகத்தை உண்டு பண்ணினவரைத் தக்க வணக்கத்தோடு உட்கொள்ள ஒரு மணி நேரத்தில் என்னை எவ்விதம் ஆயத்தப்படுத்தக் கூடும்?

உமது பெரிய தாசரும் விசேஷ சிநேகிதருமான மோயீசன் கற்பனை களின் பலகைகளை வைக்க, அழியாத மரத்தால் ஒரு பேழையைச் செய்து, பசும் பொன்னால் அதை அலங்கரித்தார்; அழிவுக்குரிய சிருஷ்டியாகிய நான் கற்பனைகளை ஏற்படுத்தினவரும் உயிரளிப் பவருமான உம்மை அவ்வளவு எளிதாய் உட்கொள்ளத் துணிவேனோ?

இஸ்றாயேல் அரசர்களில் மகா ஞானியான சாலமோன் ஏழு வருஷ காலமாய் உமது நாமத்திற்குத் தோத்திரமாக உச்சிதமான ஆலயம் கட்டுவித்தார், அபிஷேகத் திருநாளை எட்டுநாள் வரை கொண்டாடினார்; ஆயிரம் சமாதானப் பலிகளை ஒப்புக்கொடுத்தும், உடன்படிக்கைப் பெட்டகத்தை எக்காள முழக்கத்தோடும் ஆனந்தத் தோடும் அதற்குக் குறிக்கப்பட்ட இடத்தில் ஆடம்பரமாய் ஸ்தாபித் தார். மனிதருக்குள் நிர்ப்பாக்கியனுமாய், மிகவும் ஏழையுமாய், அரை மணி நேர முதலாய்ப் பக்தியில் செலவழிக்க அறியாதவனுமா யிருக்கிற நான் உம்மை என் வீட்டில் எப்படி வரவழைப்பேன்? அரை மணி நேரத்தை ஒரு முறையாவது தகுந்த விதமாய் செலவழித் திருந்தால் அல்லவோ நல்லது!

5. ஆ! என் சர்வேசுரா! அந்த நீதிமான்கள் உமக்குப் பிரியப்பட எவ்வளவோ பிரயாசைப்பட்டார்கள். ஐயோ! நான் செய்வதோ எவ்வளவு சொற்பம்! நான் தேவ நற்கருணை வாங்க ஆயத்தம் செய் வதில் எவ்வளவோ கொஞ்ச நேரம் செலவழிக்கிறேன்! அந்நேரத் திலும் முழுமையும் மன அடக்கத்தில் நிலைகொள்வது அபூர்வம்; எவ்விதப் பராக்குமில்லாமலிருப்பது அதிலும் அபூர்வம். ஆயினும் நான் உமது திவ்விய சமூகத்தில் இருக்கும்போது, தகாத நினை வொன்றும் எனக்குள் வரக்கூடாது, யாதோர் சிருஷ்டியின் பேரிலும் நான் கவனம் கொள்ளக் கூடாது; ஏனெனில் ஒரு சம்மனசானவரை யல்ல, ஆனால் சம்மனசுக்களுடைய ஆண்டவரை என் விடுதிக் குள்ளாக நான் ஏற்றுக் கொள்ள இருக்கிறேன்.

6. மேலும் உடன்படிக்கைப் பெட்டகம் அதைச் சேர்ந்த மற்றப் பொருட்கள் முதலியவற்றிற்கும், உமது மிகப் பரிசுத்த சரீரம் அதன் வாக்குக்கெட்டாத புண்ணியங்கள் முதலியவற்றிற்கும் பாரதூர வித்தியாசமுண்டு; எதிர்கால பலிக்கு அடையாளமான பழைய முறையின் பலிகளுக்கும் அவற்றையெல்லாம் பூரணமாக்குகிற உமது சரீரத்தின் மெய்யான பலிக்கும் வெகுதூர வித்தியாசமுண்டு.

7. இப்படியிருக்க, நான் ஆராதனைக்குரிய உமது சந்நிதியில் அதிக பக்தி வேகமில்லாதிருப்பது ஏன்? முற்காலத்துப் பிதாப் பிதாக்கள், தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், பிரபுக்கள், முதலிய சகலரும் தேவ ஊழியத்தின்பேரில் அவ்வளவு பக்தி காண்பித்திருக்க, உமது பரிசுத்த சற்பிரசாதத்தை உட்கொள்ள நான் அதிகக் கவலை யோடு ஆயத்தம் செய்யாததென்ன?

8. பக்தி மிகுந்த தாவீதரசன் தமது முன்னோருக்கு அளிக்கப் பட்ட உபகாரங்களை நினைத்துத் திருப்பேழைக்கு முன்பாக நடனம் ஆடுவதால் தன் பக்தி மிகுதியைக் காட்டினார்; பலவித கீத வாத்தியக் கருவிகளைச் செய்வித்தார்; சங்கீதங்களை இயற்றி ஜனங்கள் அவை களைச் சந்தோஷமாய்ப் பாடச் சொன்னார்; அவரும் இஸ்பிரீத்து சாந்துவின் அனுக்கிரகத்தால் தூண்டப்பட்டு அநேகமுறை வாத்தியத் தோடு அவைகளைப் பாடுவார்; முழுமனதோடு தேவனைத் துதிக்கவும், நாள்தோறும் ஒருவாய்ப்பட அவரைப் புகழவும் அவருடைய நன்மைகளைப் பிரசித்தப்படுத்தவும் இஸ்றாயேல் சனங்களுக்குக் கற்பித்தார். தேவ ஸ்துதிகளைச் செலுத்துவதில் உடன்படிக்கைப் பெட்டியின் பார்வை அவ்வளவு பக்தியும் உற்சாகமும் எழுப்பி யிருக்க, இப்போது நானும் சகல கிறீஸ்தவ ஜனங்களும் கிறீஸ்து நாதருடைய சரீரத்தை உட்கொள்ளுகையிலும் தேவ நற்கருணை சமூகத் தில் நிற்கையிலும் எவ்வளவு வணக்கமும் பக்தியுமுள்ளவர் களாய் இருக்க வேண்டியது! 

9. அநேகர் அர்ச்சியசிஷ்டவர்களுடைய அருளிக்கங்களைச் சந்திப்பதற்குப் பற்பல ஸ்தலங்களுக்குத் தீவிரித்துப் போகிறார்கள்; அவர்களுடைய புதுமைகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள்; அவர்களுக்குத் தோத்திரமாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கோவில் கட்டடங்களைக் கண்டு அதிசயிக்கிறார்கள்; பட்டு களாலும் பொன்னாலும் மூடப்பட்டிருக்கிற அவர்களுடைய திரு எலும்புகளை முத்தமிடுகிறார்கள். இவ்விடத்திலோ என் தேவனும் பரிசுத் தரிலும் பரிசுத்தரும் மனிதருடைய சிருஷ்டிகரும் சம்மனசுக் களுடைய ஆண்டவருமாகிய நீர்தாமே, என் ஆண்டவரே, இதோ பீடத்தின் பேரில் என் அருகில் பிரசன்னராயிருக்கிறீர். அநேகம்பேர் வீண் ஆசையினாலும் விநோதங்களைப் பார்க்க வேண்டும் என்னும் விருப்பத்தினாலும் தூண்டப்பட்டு திருயாத்திரையாய்ப் போவ துண்டு. விசேஷமாய் மெய்யான மனஸ்தாபமும் மேலான கருத்து மில்லாமல் போகிறவர்கள் அதினின்று தங்கள் புண்ணிய வளர்ச்சிக்கு வெகு சொற்ப பலன் அடைவார்கள்.

ஆனால் இங்கு, பீடத்தின் இத்தேவதிரவிய அனுமானத்தில், ஓ, கிறீஸ்துவாகிய சேசுவே! மெய்யான தேவனும் மெய்யான மனிதனு மான நீர் முழுமையும் வியாபித்திருக்கிறீர்; இதில் தக்க விதமாயும் பக்தியோடும் உம்மை உட்கொள்பவர்கள் எல்லாரும் நித்திய இரட்சணியத்தை அடையத்தக்க அனுக்கிரகங்களை ஏராளமாய்ப் பெறுகிறார்கள். வீண் ஆசையல்ல, விநோதப் பிரியமல்ல, உலகப் பற்றுதலல்ல, ஆனால் உறுதியான விசுவாசமும், பக்தியுள்ள நம்பிக் கையும் மெய்யான தேவசிநேகமும் உமது திவ்விய பந்திப் போசனத் திற்கு இழுக்கின்றன.

10. ஓ! சர்வேசுரா, பூலோகத்தில் காணப்படாத கர்த்தாவே! எங்களுக்காக நீர் செய்தவைகளெல்லாம் எவ்வளவு ஆச்சரியத்துக் குரியவைகளாயிருக்கின்றன! உமது சிநேகிதர்களுக்கு இத்தேவ திரவிய அனுமானத்தில் ஞான போசனமாக உம்மைத் தந்தருளு வதால் அவர்கள் மட்டில் நீர் காண்பிக்கிற அன்பும் தயையும் எப்பேர்ப்பட்டவைகள்! 

அதுவே எவரும் கண்டுணரக்கூடாத காரியம்; அதுவே பக்தி யுள்ள இருதயங்களை உம்மிடத்தில் இழுத்து அவைகளின் நேசத்தை பற்றியெரிய விடுகிறது. ஏனெனில் உமது இருதயத்தில் பிரமாணிக்க முள்ளவர்கள், தங்களைச் சீர்திருத்துவதில் நாள்தோறும் பிரயாசைப் பட்டவர்களாய், இந்த இணையில்லா தேவதிரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்வதால் புண்ணியத்தின் பேரில் அதிக சுறுசுறுப் பும் ஆச்சரியமான பற்றுதலும் அடிக்கடி அடைகிறார்கள்.

11. ஓ! சற்பிரசாதத்தின் ஆச்சரியத்துக்குரியதும் மறைவுள்ளது மான வரப்பிரசாதமே! கிறீஸ்துநாதருடைய பிரமாணிக்கமுள்ள சீடர்கள் மாத்திரமே அதனைச் சுகித்து அநுபவிக்கிறார்கள்; பாவத் திற்கு அடிமைகளாகிய பிரமாணிக்கமற்ற ஊழியரோ அதன் பலனை உணர முடியாது.

இந்தத் தேவதிரவிய அனுமானத்தை உட்கொள்பவர்களுக்கு ஞான வரப்பிரசாதம் கொடுக்கப்படுகின்றது; இழந்த பலன் மீண்டும் அளிக்கப்படுகின்றது; பாவத்தினால் உருமாறின ஆத்தும அழகு திரும்பக் கொடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் இந்த வரப் பிரசாதம் எவ்வளவு மகத்தானதாயிருக்கிறதென்றால் அதனால் உண்டான பக்திச் சுறுசுறுப்பின் சம்பூரணத்தால், ஆத்துமத்துக்கு மாத்திரமல்ல, பலவீனமுள்ள சரீரத்துக்கு முதலாய், ஒரு புதிதான சத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

12. தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய ஏக நம்பிக்கையும் அடைக்கலமுமாயிருக்கிற சேசுநாதர் சுவாமியை உட்கொள்ள நாம் அதிகமான ஆசைப்படாமல் இருப்பதற்குக் காரணமாகிய நமது அசட்டைத்தனத்தையும் பக்தி வெதுவெதுப்பையும்பற்றி நாம் மிகுந்த மனஸ்தாபத்தோடு பிரலாபித்து அழ வேண்டும். ஏனெனில் அவரே நமது அர்ச்சிப்பும் இரட்சணியமுமாயிருக்கிறார்; அவரே பரதேசிகளுக்கு ஆறுதலும் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு நித்திய பேரின்ப ஆனந்தமுமாயிருக்கிறார். ஆகையால் பரலோகத்தை அகமகிழச் செய்து பூலோக முழுமைக்கும் இரட்சணியமாயிருக்கும் அந்த உன்னத பரம இரகசியத்தை அநேகர் மதியாதிருப்பது மிகவும் பிரலாபத்துக்குரியதாயிருக்கின்றது. மனிதருடைய குருட்டாட்டத் தையும் கல் நெஞ்சையும் என்னென்போம்! அவன் இவ்வளவு வாக்குக்கெட்டாத வரத்தை மதிக்கிறதில்லை; அதை நாள்தோறும் பிரயோகிப்பதனாலேயே அதன் விலை அவன் கண்ணுக்குக் குறைவது போலத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தப் பூசித பலி உலகத்தில் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் நிறைவேற்றப்பட்டு, ஒரேயொரு குருவானவரால் மாத்திரம் ஒப்புக்கொடுக்கப்படுமேயானால், அந்தப் பரம இரகசியங்கள் நடத்தப்படுவதைப் பார்ப்பதற்கு அந்த ஏக ஸ்தலத்திற்கும் அந்த ஏக குருவானவரிடத்திலும் மனிதர் எவ்வளவு ஆசையாய் ஓடி வருவார்கள்! உள்ளபடி இப்போதோ, பரிசுத்த சற்பிரசாதம் பூலோகத்தில் எவ்வளவுக்கு அதிக விஸ்தார மாய்ப் பரம்பியிருக்கின்றதோ, அவ்வளவுக்கு அதிகமாய் வரப்பிர சாதமும் சர்வேசுரன் மனிதர் மேல் கொண்ட நேசமும் விளங்கும் படியாக, குருக்கள் அநேகர் ஆனார்கள். கிறீஸ்துநாதரும் அநேக ஸ்தலங்களில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

நல்ல சேசுவே! நித்திய ஆயனே! ஏழைகளும் பரதேசி களுமான எங்களை, உமது மதிப்பிட முடியாத சரீரத்தைக் கொண்டும் உமது திரு இரத்தத்தைக் கொண்டும் திடப்படுத்தச் சித்தமான உமக்கு நன்றி செலுத்துகிறோம்; “வருந்திச் சுமை சுமக்கிறவர்களே! நீங்கள் அனைவரும் நம்மிடம் வாருங்கள்; நாம் உங்களுக்கு இளைப் பாற்றியைக் கட்டளையிடுவோம்” என்று திருவாய்மலர்ந்து, நாங்கள் இந்தப் பரம இரகசியங்களைப் பெறுவதற்கு எங்களை அழைக்கத் தயை புரிந்த உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

யோசனை

பழைய வேத முறைமையில் வெகு ஆடம்பரமான உந்நத சடங்குகளிருந்தன. அவை யாவும் புது முறைமையைச் சேர்ந்த பரம இரகசியங்களுக்குச் சொற்ப நிழலைப் போலிருந்தனவே தவிர மற்ற படியல்ல. உடன்படிக்கைப் பெட்டியை ஜெருசலேமுக்குக் கொண்டு வந்தபோது தாவீதரசர் பெரியதோர் திருநாள் கொண்டாடினார்; ஆனால் அந்தப் பெட்டியில் ஒன்றுமிருக்கவில்லை, உலக இரட்சகர் அதில் இருக்கவில்லை. சாலமோன் சிறந்த ஓர் ஆலயத்தைக் கட்டி னார். ஆச்சரிய வணக்கம் நிறைந்த ஜனங்களுக்கு முன்பாக வெகு ஆடம்பரத்தோடு அதில் அபிஷேகம் நடத்தினார். ஆயிரமாயிர மான பலிகளை ஒப்புக்கொடுத்தார். ஆயினும் அந்தப் பலிகள் எல்லாம் என்ன? வெறும் மிருகங்கள். அவைகளின் இரத்தம் தேவ னுடைய நீதிக்குப் பரிகாரம் செய்ய வல்லதோ? உலகம் தீர்க்க தரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டிருந்த இரட்சகருக்கு ஆவலோடு காத்திருந்தது, பிதாப்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தம் நிறைவேறும் காலம் நெருங்கி வந்தது. அப்பொழுது இதோ! மனுமக்களால் ஆசிக்கப்பட்டவரும் வல்லபரும் உடன்படிக்கையின் தூதரும் யாவே என்னும் பேர்கொண்டவருமானவர், இதோ! தமது ஆலயத்திற்குள்ளாகப் பிரவேசிக்கிறார். உவமையாக மாத்திரமிருந்த பலிகளுக்குப் பதிலாக மெய்யான பரிகாரப் பலி நடக்கின்றது. தேவ நற்கருணைப் பெட்டிக்குள் திரையால் மூடப்பட்டு என்றும் உயிருள்ள அப்பம் வீற்றிருக்கின்றது. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையும் “நித்திய பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறவருமானவர்,” இந்தப் பெட்டிக்குள் இருக்கிறார். நம் எல்லோரையும் அன்போடு அழைத்து: “இதை எடுத்துப் புசியுங்கள், இது என் சரீரமாயிருக்கின்றது, புது உடன்படிக்கையின் இரத்தம், பாவப்பரிகாரத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம். ஓ! என் சிநேகிதரே! புசியுங்கள், பானம் செய்யுங்கள், சந்தோஷப் பரவசம் கொள்ளுங்கள்; எனக்கு மிகவும் பிரியமான வர்களே! தாகமாயிருக்கிற நீங்கள் நித்திய சீவியத்தினின்று ஓடிவரும் தண்ணீரின் ஊற்றண்டையில் வந்து சேருங்கள்” என்றார். இந்தப் பரிசுத்த ஊற்றில் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மனமில்லாதவர்கள் வேறிடங்கள் சென்று “உதவாத தண்ணீரைப் பானம் செய்கிறார்கள்;” சர்வேசுரன் “தூக்க மயக்கம் கொடுக்கும் பானத்தை அவர்கள் பானம் செய்யும்படி விட்டுவிடுகிறார், அவர்கள் கண்கள் மூடிப் போகின்றன; இந்த நித்திரையில் தாங்கள் பசியா யிருந்து போஜனம் செய்ததாக அவர்களுக்குத் தோற்றமுண்டா கின்றது; அவர்கள் விழிக்கிற போது தங்கள் ஆத்துமத்தில் ஒன்றையும் காண மாட்டார்கள். தாகமாயிருந்து தாங்கள் பானம் செய்கிறதாகக் கனவு காண்கிறார்கள், ஆனால் களைப்பினால் வருந்தி விழிக் கிறார்கள், இன்னும் தாகம் தணியவில்லை, அவர்களுடைய ஆத்துமத்தில் ஒன்றையும் காணோம்.” நம்மிடத்தில் வாருங்கள், நாம் சீவியத்தின் அப்பமாயிருக்கிறோம், நம்மையண்டி வருகிறவன் ஒருபோதும் பசியாயிருக்க மாட்டான். நமது மாமிசத்தைப் புசித்து, நமது இரத்தத் தைப் பானம் செய்கிறவன் நித்திய சீவியமடைவான். நாம் கடைசி நாளில் அவனை உயிர்ப்பிப்போம்.” ஆண்டவரே! நான் உம்மை நம்புகிறேன், உம்மை ஆராதிக்கிறேன்; என் ஆத்துமம் ஆசையின் மிகுதியினால் உம்மை நோக்கித் தாவுகின்றது; ஆனால் பெருத்த பயங்கரம் என்னைத் தடுத்துப் போடுகின்றது; ஏனெனில் என் சர்வேசுரனிடத்தில் அண்டிப்போக நான் யார்? என் பாவங்களையும், என் நீசத்தனத்தையும், என் பெரிய நிர்ப்பாக்கியத்தையும் நான் யோசிக்கும்போது “என்னைவிட்டு அகன்று போய்விடும்” என்று சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன். ஆயினும், நல்ல சேசுவே! புண்ணியவான்களையல்ல, பாவிகளைத்தானே நீர் அழைக்க வந்தீர், ஆனதால் மனஸ்தாபப்பட்டு என் மார்பில் தட்டிக் கொண்டு உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடி “எழுந்திருப்பேன், என் தந்தையை நோக்கிப் போவேன்.” உயிருள்ள விசுவாசத்தோடும், உருக்கமான நேசத்தோடும் சுதனை நோக்கிப் போவேன். நித்திய வார்த்தையும், சர்வேசுரனுடைய மகிமையின் ஒளியும், என் பாவங்களினின்று என்னைச் சுத்திகரிக்கிற இரட்சகரும், சிருஷ்டியைத் தம்மட்டும் உயர்த்துவதற்காக அதனுடன் ஒரே சரீரமாகிறவருமாகிய சேசுவை அண்டிப்போவேன். போய் அவரை நோக்கி: “ஆண்டவரே! நீர் என் உள்ளத்தில் வர நான் தகுதியுடையவனல்ல, நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்வீரானால், என் ஆத்துமம் ஆரோக்கியமடையும்” என்று கூறுவேன். நம்புகிறேன், உம்மை ஆராதிக்கிறேன்; என் ஆத்துமம் ஆசையின் மிகுதியினால் உம்மை நோக்கித் தாவுகின்றது; ஆனால் பெருத்த பயங்கரம் என்னைத் தடுத்துப் போடுகின்றது; ஏனெனில் என் சர்வேசுரனிடத்தில் அண்டிப்போக நான் யார்? என் பாவங்களையும், என் நீசத்தனத்தையும், என் பெரிய நிர்ப்பாக்கியத்தையும் நான் யோசிக்கும்போது “என்னைவிட்டு அகன்று போய்விடும்” என்று சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன். ஆயினும், நல்ல சேசுவே! புண்ணியவான்களையல்ல, பாவிகளைத்தானே நீர் அழைக்க வந்தீர், ஆனதால் மனஸ்தாபப்பட்டு என் மார்பில் தட்டிக் கொண்டு உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடி “எழுந்திருப்பேன், என் தந்தையை நோக்கிப் போவேன்.” உயிருள்ள விசுவாசத்தோடும், உருக்கமான நேசத்தோடும் சுதனை நோக்கிப் போவேன். நித்திய வார்த்தையும், சர்வேசுரனுடைய மகிமையின் ஒளியும், என் பாவங்களினின்று என்னைச் சுத்திகரிக்கிற இரட்சகரும், சிருஷ்டியைத் தம்மட்டும் உயர்த்துவதற்காக அதனுடன் ஒரே சரீரமாகிறவருமாகிய சேசுவை அண்டிப்போவேன். போய் அவரை நோக்கி: “ஆண்டவரே! நீர் என் உள்ளத்தில் வர நான் தகுதியுடையவனல்ல, நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்வீரானால், என் ஆத்துமம் ஆரோக்கியமடையும்” என்று கூறுவேன்.