இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

01. உள்ளரங்க சீவியம்

1. “சர்வேசுனுடைய இராச்சியம் உங்களுக்குள் இருக்கின்றது” என்று ஆண்டவர் திருவுளம்பற்றுகிறார். உன் முழு இருதயத்தோடு ஆண்டவரை நோக்கி, இந்த நிர்ப்பாக்கிய உலகத்தை நீ துறந்துவிடு, அப்போது உன் ஆத்துமம் இளைப்பாற்றியைக் கண்டடையும். இவ்வுலக நன்மைகளை நிந்தித்து ஞான நன்மைகளை அடையப் பிரயாசைப்படு, அப்போது சர்வேசுனுடைய இராச்சியம் உன்னிடம் வரக் காண்பாய். ஏனெனில் “சர்வேசுனுடைய இராச்சியம் இஸ்பிரீத்து சாந்துவினிடத்தில் சமாதானமும் சந்தோஷமும்.” ஆம், இது பக்தியில்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. நீ உன் உள்ளத்தில் கிறீஸ்துநாதருக்குத் தகுதியான இருப்பிடம் ஏற்பாடு செய்திருந்தால், அவர் உன்னிடம் வந்து உனக்குத் தமது ஆறுதல்களையளிப்பார். அவர் ஆசிக்கிற மகிமையும் அழகும் எந்த ஆத்துமத்தில் உள்ளதோ: அவ்விடத்தில்தான் மகிழ்ந்து கொள்கிறார். அந்தரங்க ஜீவியத்தை நாடின மனிதனுடைய இருதயத்தை அவர் அடிக்கடி சந்திக்கிறார், அவனுடன் இன்பமாய்ச் உரையாடுகிறார்; அவனுக்கு மதுரமான ஆறுதல் தந்தருளுகிறார், ஏராளமான சமாதானம் கொடுக்கிறார், மிகவும் ஆச்சரியத்திற்குரிய நேசம் காண்பிக்கிறார்.

2. ஓ! பிரமாணிக்கமுள்ள ஆத்துமமே! உற்சாகமாயிரு! இந்தப் பரிசுத்தப் பத்தாவானவர் உன்னிடம் வந்து வாசம் பண்ணியருளும் படியாக, உன் இருதயத்தை ஆயத்தப்படுத்து. ஏனெனில் அவர் “எவனாவது என்னை நேசிப்பானாகில், என் கட்டளைகளை அனுசரிக் கிறான். நாம் அவனிடம் வருவோம், அவனுள்ளத்தில் வாசம் செய் வோம்” என்று வசனித்தார். ஆனதால் கிறீஸ்துநாதருக்கு இடங் கொடு; மற்ற யாதொன்றும் உன்னில் பிரவேசிக்க விடாதே. கிறீஸ்து நாதர் உன்னிடம் இருக்கும்போது நீ செல்வந்தன், அவர் இருப்பதே உனக்குப் போதுமானது. நீ மனிதர் மட்டில் உன் நம்பிக்கை வைக்க அவசியமிராதபடி அவரே உன் பிரமாணிக்கமுள்ள காரியஸ்தரும் விசாரணைக்காரருமாக இருப்பார். ஏனெனில் மனிதர் சீக்கிரத்தில் மாறிப் போகிறார்கள், திடீரென்று அகன்று போகிறார்கள். கிறீஸ்துநாதரோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கிறார்; கடைசிவரை திடனாய் நமக்கு உதவிபுரிகிறார்.

3. மனிதன் உனக்குப் பிரயோசனமுள்ளவனும் உன்னால் நேசிக்கப்பட்டவனுமாயிருந்தபோதிலும், பலவீனனும் சாகவேண்டி யவனுமாகையால், அவன் மட்டில் அதிக நம்பிக்கை கொள்ளத் தகாது. அவன் எப்போதாவது உன்னை எதிர்த்தாலும் விரோதித் தாலும் அதைப்பற்றி அதிகக் கஸ்திக்குள்ளாகவும் தகாது. இன்றைக்கு உன்னோடு கூட இருக்கிறவர் நாளைக்கு உனக்கு விரோதமாக நிற்கக் கூடும்; அதற்கு மாறாக இன்று உன்னைப் பகைக்கிறவர்கள் நாளை உன் சிநேகிதராகக் கூடும். மனிதர்கள் அடிக்கடி காற்றைப்போல மாறுவார்கள். உன் நம்பிக்கை முழுமையும் சர்வேசுரனிடத்தில் வை; அவருக்கு மட்டும் பயந்து நட; அவரை மட்டும் நேசி; அப்போது அவரே உனக்கு உத்தரவாதியாயிருப்பார்; எது உனக்கு அதிக நல்லதோ அதை நியாயமாய்ச் செய்வார். இவ்வுலகத்தில் நிலையான இல்லிடம் உனக்குக் கிடையாது. நீ எங்கிருந்த போதும் அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறாய். கிறீஸ்துநாதரோடு அன்னியோன்னியமாய் ஒன்றித்திருந்தாலே தவிர மற்றப்படி ஒருபோதும் நீ இளைப்பாற்றியடைவதில்லை.

4. இவ்வுலகம் நீ இளைப்பாறும் இடமல்ல; ஆதலால் நீ ஏன் வீணில் சுற்றிலும் பார்க்கிறாய்? பரலோகத்தில்தான் உன் வாசஸ்தலம் இருக்க வேண்டியது; அதனால் நீ உலகக் காரியம் அனைத்தையும் வழிப்போக்கனாகப் பார்க்க வேண்டும். அவையெல்லாம் கடந்து போகும்; நீயும் அவைகளைப் போல் கடந்துபோவாய். அவைகளின் மேல் பற்றுதல் வைக்காமல் ஜாக்கிரதையாயிரு. உன்னத சர்வேசுரன் பேரில் நினைப்பாயிரு. உன் மன்றாட்டு இடைவிடாமல் கிறீஸ்து நாதரை நோக்கிச் செல்லக்கடவது. பரலோகத்திற்கடுத்த மேலான விஷயங்களைப் பற்றித் தியானிக்க உன்னால் கூடாமல் போனால், கிறீஸ்துநாதருடைய பாடுகளைத் தியானித்து அவருடைய திருக் காயங்களில் வாசம் செய்ய பிரியப்படு. சேசுநாதருடைய விலையேறப் பெற்ற திருக்காயங்களில் நீ பக்தியோடு அடைக்கலம் புகுந்தால், துன்ப காலங்களில் வெகு தைரியமாயிருப்பாய், மனிதருடைய நிந்தைகளை அதிகம் கவனிக்க மாட்டாய், உன் பேரில் சொல்லப் பட்ட அவதூறுகளையும் எளிதாய்ச் சகித்துக் கொள்ளுவாய்.

5. பூலோகத்தில் கிறீஸ்துநாதரும் மனிதரால் நிந்திக்கப் பட்டார்; மேலும் மிகவும் கொடூர துன்பங்கள் நடுவில், வாக்கினால் வர்ணிக்கப்படாத அவஸ்தைப்படும் நேரத்தில், அறிந்தவர்களாலும் சிநேகிதராலும் கைவிடப்பட்டார். கிறீஸ்துநாதர் பாடுபடவும் நிந்தைப்படவும் சித்தமானார் என்று அறிந்திருக்கிற நீ, எப்படி எதைப் பற்றியாவது முறையிடத் துணிவாய்? உனக்கு யாதோர் விரோதமும் நேரிடாமல் போனால் உன் பொறுமையால் எப்படி முடிபெறுவாய்? விரோதமான யாதொன்றும் சகிக்க உனக்கு மனதில்லாவிட்டால் நீ கிறீஸ்துநாதருடைய சிநேகிதனாயிருப்பதெப்படி? கிறீஸ்துநாதரோடு இராச்சியபாரம் பண்ண உனக்கு மனதானால், கிறீஸ்துநாதரோடும் கிறீஸ்துநாதரைப் பற்றியும் பொறுமையாயிரு.

6. நீ சேசுநாதருடைய இருதயத்தில் நன்றாய்ப் பிரவேசித்து அவருடைய உற்சாகமுள்ள நேசத்தைச் சற்று கண்டுபிடித்திருந்தால், அப்போது உனக்குப் பிரியப்படுவது எது பிரியப்படாதது எது என்று கவனிக்க மாட்டாய்; மாறாக உனக்குச் செய்யப்பட்ட அவமானத் தைப் பற்றிச் சந்தோஷப்படுவாய்; ஏனெனில் சேசுநாதரை நேசித்த லானது மனிதன் தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளும்படி செய் கின்றது. சேசுநாதரையும் சத்தியத்தையும் நேசிக்கிறவனும், மன அடக்கமுள்ளவனும், ஒழுங்கற்ற பற்றுதலற்றவனுமானவன் தன்னைத் தடையின்றிச் சர்வேசுரனிடமாகத் திருப்பிக்கொண்டு, தன்னை விட்டு விட்டு மேலான சிந்தனையாயிருந்து, மிகுந்த பலனோடு இளைப் பாற்றியை அடைந்து சுகிக்கக்கூடும்.

7. மனிதனுடைய சொல்லுக்கும் மதிப்புக்கும் தக்கபடியல்ல, ஆனால் அதது இருக்கிறதற்குத் தக்கபடி இவ்வுலகக் காரியங்களை மதிப்பவன் மெய்யான ஞானியாவான்; அவனிடத்திலுள்ள அறிவு மனிதராலல்ல, சர்வேசுரனால் உதித்தது. ஞானக்கருத்துடன் நடக்க அறிந்து வெளிக் காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிற வனுக்கு தன் பக்தி முயற்சிகளைச் செய்ய எவ்விடமும் எந்தக்காலமும் தகுதியாயிருக்கின்றன. அவன் ஒருபோதும் வெளிக்காரியங்களின் பேரில் தன் புத்தியெல்லாம் செலுத்தாமல் இருக்கிறபடியால், அவனுக்குத் தாமதமின்றி மனக் கட்டுப்பாடு உண்டாகும். வெளிப் பிரயாசையும் சரி, அல்லது காலத்திற்கு அவசரமான வேலையும் சரி, அவனுக்குத் தடையாயிருப்பதில்லை. ஆனால் எது எப்படி நேரிட் டாலும், அதற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்கிறான். உள்ளத்தில் நல்ல கருத்தோடும் ஒழுங்கோடும் இருக்கிறவன், மானிடர் செயல் களில் பிரபலமானதைப் பற்றியும் குறைவுள்ளதைப் பற்றியும் கவனிப்பதில்லை. எம்மாத்திரம் வெளிக்காரியங்களைப் பற்றிக் கவலைப்படுகிறோமோ, அம்மாத்திரம் தடையும் பராக்கும் நமக்கு நேரிடும். 

8. உனது ஆத்துமம் நேர்மையும் சுத்தமுமுள்ளதாயிருக்குமே யானால், சகலமும் உன் நன்மைக்கும் புண்ணிய வளர்ச்சிக்கும் உதவியாகும். அநேக காரியங்கள் உனக்குப் பிரியப்படாமல் உன்னைக் கலக்கத்திற்குள்ளாக்குவதற்குக் காரணமென்னவெனில், நீ இன்னும் முழுமையும் உனக்கே நீ மரித்துப் போகாமல் உலகக் காரியங்களை யெல்லாம் விட்டு விலகாததேயாம். சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துகளின் பேரிலுண்டான ஒழுங்கற்ற பற்றுதல்தான் மனிதனுடைய ஆத்து மத்தை விசேஷமாய்க் கலக்கி அசுத்தமாக்கி வருகிறது. வெளி ஆறுதலைத் தேடாதிருப்பாயானால், மேலான தியானம் செய்யவும் அடிக்கடி ஞான சந்தோஷம் கொள்ளவும் உனக்குக் கூடுமாயிருக்கும்.

யோசனை

உலகத்தை வெறுத்த கிறீஸ்துவ ஆத்துமத்திற்கு இம்மையிலும் மறுமையிலும் ஒரேயொரு ஆசைதான் இருக்கவேண்டியது, அதாவது சேசுநாதரோடு ஒன்றித்திருக்க வேண்டுமென்ற ஆசை. “என் நேசர் எனக்குச் சொந்தம்; நான் அவருக்குச் சொந்தம். அவர் உதயகாலம் உதிக்கிற வரைக்கும், இருள் நீங்கும் வரைக்கும், லீலி புஷ்பங்களின் நடுவே இளைப்பாறுகிறார்.” ஐயோ! நீ வெளியில் என்ன தேடுகிறாய்? உன் உள்ளத்தை நாடு, பரலோக பத்தாவுக்குத் தகுதியான இல்லிடம் ஆயத்தமாக்கு; அவர் வருவார். அங்கே இளைப்பாறுவார். தம்மை அழைக்கிற இருதயத்தில் வசிப்பதே அவருக்கும் இன்பம். அப்போது சேசுநாதரோடு தனித்து, பூலோக சந்தடியினின்று நீங்கி சிருஷ்டிகளை விட்டகன்று இருக்கும்போது “சிநேகிதன் தன் சிநேகிதனோடு பேசுவது போல” அவர் உன்னிடம் பேசுவார். நீயும் அவரோடு உரையாடுவதில் ஆனந்தம் கொண்டு மற்ற யாரோடும் பேச பிரியம் கொள்ள மாட்டாய்.